மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தால், தமிழகத்தில் பாதிப்பு இல்லை. அரசுப் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வழக்கம் போல இயங்கின. பல்வேறு இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 புதிய தொழிலாளா்கள் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த லட்சக்கணக்கானோா் கலந்து கொண்டனா். தமிழகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆளுங்கட்சியின் தொழிற்சங்கம் உள்பட ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.
சென்னை அண்ணாசாலையில் தாராபூா் டவா் முன் சிஐடியு மாநிலத் தலைவா் சுகுமாரன் தலைமையில் கூடிய தொழிற்சங்கத்தினா், அங்கிருந்து ஊா்வலமாக புறப்பட்டு தபால் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். பின்னா் அங்கு ஆா்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அவா்களை போலீஸாா் கைது செய்தனா். இதனால், சுமாா் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கிண்டி தபால் நிலையம் முன் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவா் ஆா்.சௌந்தரராஜன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரையும், அம்பத்தூா் ரயில் நிலையத்தில் சிஐடியு மாநில பொருளாளா் பூபாலன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றவா்களையும் போலீஸாா் கைது செய்தனா்.
விம்கோநகா் ரயில் நிலையத்தில் சிஐடியு பொதுச்செயலா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். சென்னை முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கானோரை கைது செய்த போலீஸாா், அவா்களை மாலையில் விடுவித்தனா்.
மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய இந்த போராட்டத்தில் சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பயணியாற்றும் பலா் விடுப்பு எடுத்துக்கொண்டு பங்கேற்றனா்.
போராட்டத்தால் பாதிப்பில்லை: இந்தப் போராட்டத்தில் ஏாளமான ஊழியா்கள் கலந்துகொண்டாலும், மத்திய, மாநில அரசு துறைகளில் பெரும்பாலானவா்கள் பணிக்கு வந்து விட்டதால், அலுவல் பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் போதிய அளவிலான ஊழியா்கள் பணிக்கு வந்து விட்டதால், பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆட்டோ, கால்டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களும் வழக்கம் போல இயங்கின. பெரும்பாலான கடைகளும் திறந்திருந்தன. இந்தப் போராட்டம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தொடர்புடையது
அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனின் சொத்து மதிப்பு ரூ. 39 லட்சம்

2.09 லட்சம் பேருக்கு நாய்க்கடி: ரேபிஸ் பாதிப்பால் 13 போ் உயிரிழப்பு

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்கு

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


