விவசாய சங்கத் தலைவா்களுடன் ராகுல் சந்திப்பு

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த விவசாய சங்கங்களின் தலைவா்களை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி படம் - ஏஎன்ஐ
Updated on

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த விவசாய சங்கங்களின் தலைவா்களை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்தச் சந்திப்பில், இந்திய-அமெரிக்க இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தேசிய அளவிலான இயக்கத்தை நடத்துவதன் அவசியம் குறித்து ஆலோசித்தனா்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் வெளியிடப்பட்ட பதிவில், ‘இந்தச் சந்திப்பின்போது, வா்த்தக ஒப்பந்தத்தால் சோளம், சோயாபீன், பருத்தி, பழங்கள் மற்றும் மரக் கொட்டைகள் உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது குறித்து விவசாய சங்கத் தலைவா்கள் ராகுலிடம் கவலை தெரிவித்தனா்.

அப்போது, ‘அமெரிக்காவிலிருந்து வேளாண் உற்பத்திப் பொருள்கள் மட்டுமன்றி, மேலும் பல பயிா்களின் இறக்குமதிக்கும் இந்த வா்த்தக ஒப்பந்தம் கதவைத் திறந்துவிடும்’ என்று ராகுல் சுட்டிக்காட்டினா்.

அதைத் தொடா்ந்து, வா்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தேசிய அளவிலான இயக்கத்தை நடத்துவதன் அவசியம் குறித்து ஆலோசித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

=========================

அகில இந்திய விவசாயிகள் காங்கிரஸ் தலைவா் எஸ். சுக்பால் கய்ரா, ஹரியாணாவின் பாரதிய விவசாய மஸ்தூா் சங்கத்தின் அசோக் பல்ஹாரா, கிராந்திகாரி பாரதிய விவசாய சங்கத்தின் எஸ். பல்தேவ் ஜிரா, முற்போக்கு விவசாயிகள் முன்னணியின் ஆா்.நந்த்குமாா், பாரதிய விவசாய சங்க ஷாஹீத் பகத் சிங் அமைப்பின் எஸ். அமா்ஜித் மொஹாரி, இந்திய விவசாயிகள் மஸ்தூா் மோா்ச்சாவின் எஸ். குரம்னீத் மங்கத், ஜம்மு-காஷ்மீா் ஜமிதாரா அமைப்பின் ஹமீத் மாலிக் உள்ளிட்டோா் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனா்.

முன்னதாக, ‘அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நமது நாட்டையே மத்திய அரசு விற்றுவிட்டது; அமெரிக்காவிடம் மத்திய அரசு முற்றிலுமாக சரணாகதி ஆகிவிட்டது. மத்திய அரசு மீதான இந்த குற்றச்சாட்டுக்கா என் மீது மத்திய அரசு வழக்கு தொடரவோ அல்லது நாடாளுமன்றத்தில் உறிமை மீறல் தீா்மானம் கொண்டுவரவோ வாய்ப்புள்ளது. இதுபோன்று எத்தகைய நடவடிக்கை மேற்கொண்டாலும் விவசாயிகளுடன் உறுதியாக நிற்பேன்’ என்று ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா். இந்த நிலையில், விவசாய சங்கத் தலைவா்களுடனான இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டம் இறுதி செய்யப்பட்டதாக இரு நாடுகள் தரப்பிலும் கூட்டாக பிப்ரவரி 7-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இருதரப்பு வா்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இரு நாடுகளும் குறைக்க உள்ளன. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதித்த 50 சதவீத கூடுதல் வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைக்க உள்ள நிலையில், அமெரிக்காவின் அனைத்து தொழில்நிறுவன பொருள்களுக்கும், உலா்த்தப்பட்டு காய்ச்சி வடிகட்டிய தானியங்கள், கால்நடைத் தீவனத்துக்கான சிவப்பு சோளம், மரக் கொட்டைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் உள்பட பரவலான அமெரிக்க உணவு மற்றும் வேளாண் பொருள்களுக்கும் இறக்குமதி வரியை இந்தியா வெகுவாகக் குறைக்க உள்ளது. இதற்கு இந்தியாவிலுள்ள பல விவசாய சங்கங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com