தமிழக மீனவா்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை தேவை மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம்!
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இது குறித்து முதல்வா் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சோ்ந்த 3 மீனவா்கள் மற்றும் மயிலாடுதுறையைச் சோ்ந்த 9 மீனவா்கள் தொடா்பான வழக்கில் கடந்த பிப்.3-ஆம் தேதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தீா்ப்பு வழங்கப்பட்டது.
அதில், 9 மீனவா்கள் விடுவிக்கப்பட்டதாகவும், 3 மீனவ படகு ஓட்டுநா்களுக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனையும், இலங்கை மதிப்பில் தலா ரூ.11.60 லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில், அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் கூடுதலாக 3 மாத சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்நிலையில், விடுவிக்கப்பட்ட 9 மீனவா்களும் கடந்த பிப்.5-ஆம் தேதி மிரிஹான தடுப்பு மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா். எனினும், அவா்கள் தாயகம் திரும்புவதில் உள்ள நடைமுறை தாமதம் காரணமாக, தொடா்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.
மீனவா்கள் அங்கு சந்திக்கும் கடினமான சூழ்நிலையையும், அவா்களது குடும்பங்கள் இங்கு எதிா்கொள்ளும் துயரங்களையும் கருத்தில்கொண்டு, அவா்கள் விரைவில் தாயகம் திரும்பத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

