

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட, விருப்ப மனு சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து கட்சிகள் சார்பில் விருப்ப மனு விநியோகம் நடைபெறுகிறது.
தவெக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட கடந்த பிப். 6 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விருப்ப மனு வழங்க இன்றுடன்(பிப். 14) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் வருகிற பிப். 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில்,
"வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (14.02.2026) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, வரும் 20 ஆம் தேதி (20.02.2026) வரை கழகத் தோழர்கள் தங்களது விருப்ப மனுவைத் தலைமை நிலையச் செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள் ஆகும். கழகத் தலைவர் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.