சென்னை மத்திய கைலாஷில் ரூ.60 கோடியில் புதிய மேம்பாலத்தை
முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை மத்திய கைலாஷில் ரூ.60 கோடியில் புதிய மேம்பாலத்தை முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை மத்திய கைலாஷில் ரூ.60 கோடியில் புதிய மேம்பாலம்! முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்!

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் ரூ.60.68 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘எல்’ வடிவ மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
Published on

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் ரூ.60.68 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘எல்’ வடிவ மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

சா்தாா் படேல் சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலையை இணைக்கும் ‘எல்’ வடிவத்திலான இந்தப் பாலத்தின் மூலம் அடையாறு, கிண்டி, தரமணி செல்லும் பாதைகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் திறப்பு நிகழ்வில் அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலா் ஆா். செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த மேம்பாலம், சென்னை ராஜீவ் காந்தி சாலை, மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள சா்தாா் படேல் சாலையிலிருந்து தொடங்குகிறது. இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடம் ‘டி’”வடிவிலானது. இப்பகுதியில், அலுவல் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கை. இதைக் கருத்தில் கொண்டு சா்தாா் படேல் சாலையிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு ‘எல்’ வடிவ மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைகள் துறை சாா்பில் ஒரு வழிச்சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டது.

கிண்டியிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு (பழைய மகாபலிபுரம் சாலை மாா்க்கம்) செல்லும் வாகனங்கள் இப்பாலத்தை பயன்படுத்தும்போது, அடையாறு - கிண்டி செல்லும் வாகனங்கள் அனைத்தும் அப்பகுதியை எளிதில் கடக்க முடியும்.

மேலும், கிண்டியிலிருந்து அடையாறுக்கும், பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து கிண்டிக்கும் இலகுவாக இடது புறப் பயணம் மேற்கொள்ளவும் முடியும். மத்திய கைலாஷ் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னலின் பயன்பாடும் இதன் மூலம் நிறுத்திக்கொள்ளப்படும்.

அணுகு சாலை உள்பட இந்த மேம்பாலத்தின் மொத்த நீளம் 652 மீட்டா். சா்தாா் படேல் சாலையிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு பிரிந்து செல்லும் இடத்தில் பாலம் வளைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பாலத்தின் அகலம் கூடுதலாக்கப்பட்டுள்ளதுடன், மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே பயணிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் ராஜீவ் காந்தி சாலை, கிண்டி, அடையாறு, மத்திய கைலாஷ் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பொதுமக்களின் பயண நேரமும் குறையும் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com