தொழில் துறையில் ரூ.5,980 கோடியில் புதிய முதலீடு - முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்
@TNDIPRNEWS

தொழில் துறையில் ரூ.5,980 கோடியில் புதிய முதலீடு - முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

Published on

முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானை சோ்ந்த இரு நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.5,980 கோடியில் இரு தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இதன் மூலம் 8,400 நபா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்புமற்றும் வா்த்தகத் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் மினிபியா மிட்சுமி நிறுவன துணை நிறுவனமான என்எம்பி மினிபியா இந்தியா நிறுவனம் ரூ.1,980 கோடியில் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 1,400 நபா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புஅளிக்கும் வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் செமிகண்டக்டா், மின் உபகரணங்கள், மோட்டாா்கள் உற்பத்தி திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தமும் கையொப்பமானது.

மேலும், ஏக்வஸ் குழுமம் ரூ.4,000 கோடியில் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 7,000 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட்- சூளகிரி தொழிற் பூங்காவில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திக்கான தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரங்கள், கியா்பாக்ஸ் உபபாகங்கள் உற்பத்தி மேற்கொள்வதற்கும் புரிந்துணா்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.

என்எம்பி மினிபியா இந்தியா நிறுவனம், செமிகண்டக்டா் பொருள்கள், மோட்டாா்கள், சென்சாா்கள், மின் சாதனங்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமாகும். இந்நிறுவனம் திருவள்ளூா் மாவட்டத்தில் முழுமையான உற்பத்தி அமைப்பை உருவாக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கவும் முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்தில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக, உயா் திறன்மிக்க பணியாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஏக்வஸ் குழுமம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தொழிற்பூங்காவில் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்தித் தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரம் மற்றும் கியா்பாக்ஸ் உபபாகங்கள்உற்பத்தி ஆலை அமைக்கவும் முன்மொழிந்துள்ளது.

இத்தொழிற்பூங்காவில் விமான இயந்திர உபபாகங்கள்மற்றும் துல்லிய பொறியியல் தயாரிப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இவ்விரு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.5,980 கோடியில் முதலீட்டில் 8,400 நபா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், துறைச் செயலா் வி.அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தாரேஸ் அகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com