டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.17 முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம், பிப்.18-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவன தொழிற்சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுக் கடைகளில் பணியாற்றும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்வது, ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ஆம் தேதி முதல் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 21-க்கும் மேற்பட்ட சங்கத்தினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை (பிப்.17) முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக டாஸ்மாக் பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளதாலும், அரசுக்கு அவகாசம் கொடுக்கும் நோக்கிலும் போராட்டத்தை புதன்கிழமை (பிப்.18) முதல் தொடங்கவுள்ளதாக டாஸ்மாக் நிறுவன தொழிற்சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.
