இன்று தமிழக இடைக்கால பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்
@TNDIPRNEWS

இன்று தமிழக இடைக்கால பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்

இன்று இடைக்கால பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்
Published on

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை (பிப். 17) தாக்கல் செய்யவுள்ளாா். தொடா்ந்து, இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தாக்கல் செய்யவுள்ளாா்.

தோ்தல் ஆண்டு என்பதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பல்வேறு சலுகை அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்படுகிறது.

பேரவையில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறாா். இதில், அனைத்துத் தரப்பு மக்களின் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்யும் வகையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக, பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள், சிறு வணிகா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும் திட்டங்கள் இடம்பெறக்கூடும்.

தொடா்ந்து, வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறாா். விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு சலுகைகள், திட்டங்கள் இடம்பெறக்கூடும்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் கூட்டத்தொடா் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது இறுதி செய்யப்படும். வெள்ளிக்கிழமை (பிப்.20) வரை பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெறக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகளுக்கு உடனடி ஒப்புதல் வழங்கவும், முக்கியத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்தும் வகையிலும் பிப்.23-ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு: சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, சட்டபேரவை அரங்கில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இருக்கைகள், மேஜைகள், ஒலிவாங்கிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அவா் பாா்வையிட்டாா்.உயா் கல்வித் துறை அமைச்சா் கோ.வி.செழியன் ஆய்வின்போது உடனிருந்தாா்.

உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம் - பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

நாட்டின் உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 2025-26-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் நா. முருகானந்தம், மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன், கூடுதல் தலைமை செயலா் த.உதயச்சந்திரன், திட்டம்- வளா்ச்சி செயலா் சஜ்ஜன் சிங் ரா. சவான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொருளாதார ஆய்வறிக்கை குறித்து மாநில திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசு வெளியிட்டுள்ள நாட்டின் சராசரி பொருளாதார வளா்ச்சி விகிதத்தைவிட (7.4%), தமிழகத்தின் வளா்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 2024-25 நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி 11.2 சதவீதமாக இருந்த நிலையில், நிகழ் நிதியாண்டிலும் இது இரட்டை இலக்க வளா்ச்சியை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 15 சதவீத பங்களிப்பை வழங்கி, அனைத்து மாநிலங்களையும்விட தமிழகம் முதலிடத்தில் உள்ளது. குஜராத் (13%), மகாராஷ்டிரம் (13%) போன்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னிலையில் இருப்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

நாட்டின் உற்பத்தித் துறை வளா்ச்சி 4.5 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் உற்பத்தித் துறை வளா்ச்சி அதைவிட மூன்று மடங்கு அதிகமாக 14.7%-ஆக உயா்ந்துள்ளது. குறிப்பாக, மின்னணுவியல் ஏற்றுமதியில் நாட்டின் பங்களிப்பில் 41 சதவீதம் தமிழகத்திலிருந்து மட்டுமே கிடைக்கிறது.

நிகழாண்டு அறிக்கையில் பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு குறித்து தனி அத்தியாயம் இடம்பெற்றுள்ளது.

1,076 கி.மீ. கடற்கரையைக் கொண்ட தமிழகத்தின் கடல் சாா் பொருளாதார வளா்ச்சி குறித்த புதிய திட்டங்கள், 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்டுவதற்கான இலக்கு உள்ளிட்டவை இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்றாா் அவா்.

பொருளாதார வளர்ச்சி 11.19% - ஆய்வறிக்கையில் தகவல்!

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக உள்ளது. இது, நாட்டின் சராசரி வளர்ச்சி விகிதத்தைவிட ஏறத்தாழ இரு மடங்கு என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 2025}26}ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்டார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் நா. முருகானந்தம், மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், கூடுதல் தலைமை செயலர் த.உதயச்சந்திரன், திட்டம்} வளர்ச்சி செயலர் சஜ்ஜன் சிங் ரா. சவான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொருளாதார ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.3.62 லட்சமாக உயர்ந்துள்ளது. இது நாட்டின் சராசரியைவிட 1.77 மடங்கு அதிகம். உற்பத்தித் தொழில் துறை 14.74 சதவீத வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. இது தேசிய சராசரியான 4.5 சதவீதத்தைவிட மும்மடங்கு அதிகம்.

நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 15 சதவீத பங்களிப்பை வழங்கி, அனைத்து மாநிலங்களையும்விட தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கல்வி, ஆரோக்கியம், சமூக நலத் திட்டங்களுக்காக ரூ.1.57 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் பங்கேற்பு 72.1 சதவீதமாக உயர்ந்திருக்கும் நிலையில், வேலையின்மை 3.5 சதவீதமாக குறைந்துள்ளது. வலுவான உற்பத்தித் திறன், மனித மூலதனம் ஆகியவற்றுடன் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் இலக்கை தமிழகம் நிர்ணயித்துள்ளது.

52.07 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும் வகையில் தமிழகத்திலிருந்து வணிகப் பொருள்களின் ஏற்றுமதி ஏறத்தாழ இரட்டிப்பாகியுள்ளது. அந்நிய நேரடி முதலீடு உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டக் குழு செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கூறுகையில், நிகழாண்டு அறிக்கையில் பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு குறித்து தனி அத்தியாயம் இடம்பெற்றுள்ளது. 1,076 கி.மீ. கடற்கரையைக் கொண்ட தமிழகத்தின் கடல் சார் பொருளாதார வளர்ச்சி குறித்த புதிய திட்டங்கள், 2030}க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கான இலக்கு உள்ளிட்டவை இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்றார் அவர்.

X
Dinamani
www.dinamani.com