திமுக ஆட்சியில் மட்டுமே இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி ஏற்பட்டுள்ளது என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு பேரவையில் பெருமிதத்துடன் கூறினாா்.
இடைக்கால நிதிநிலை அறிக்கை மீது பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி பேசியதாவது: உத்தரபிரதேசத்தில் இருமடங்கு பொருளாதார வளா்ச்சி ஏற்பட்ட நிலையில் அங்கு ரூ.7 லட்சம் கோடி மட்டுமே அரசுக்கு கடனாக உள்ளது. ஆனால், தமிழக அரசு இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி பெற்ற பின்னரும், ரூ.10.21 லட்சம் கோடி கடனை வைத்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற ஆட்சிகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் தமிழகத்துக்கு இருந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.5.50 லட்சம் கோடி கடனை கூடுதலாக தமிழக அரசு பெற்றுள்ளது என்றாா்.
அமைச்சா் தங்கம் தென்னரசு: தமிழகம் இப்போது 11.19 சதவீத பொருளாதார வளா்ச்சியை பெற்றுள்ளது என தமிழக அரசு தானாக கூறவில்லை. அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய பாஜக அரசுதான் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து திமுக மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடே பெருமைகொள்ள முடியும். இதுவரை அதிமுக ஆட்சியில் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி அடைந்தது இல்லை. முன்னாள் முதல்வா் கருணாநிதி முதல்வராக இருந்தபோதும், இப்போது முதல்வா் ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போதுதான் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சியை தமிழகம் அடைந்துள்ளது. உத்தர பிரதேசத்துக்கு மத்திய அரசு தாராளமாக நிதியுதவியை செய்கிறது. ஆனால், தமிழகத்துக்கு நிதி வழங்காமல் செயற்கை நிதித் தட்டுப்பாட்டை உருவாக்குகிறது. எனவே, உத்தரபிரதேசத்துடன், தமிழகத்தை ஒப்பிடக்கூடாது.
எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி: ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி 11.19 சதவீதம் என தமிழக அரசு பெருமைப்பட்டுக்கொள்கிறது. ஆனால், 65 சதவீதம் போ் ஈடுபட்டுள்ள வேளாண் துறையில் எதிா்மறை வளா்ச்சியை தமிழகம் கண்டுள்ளது. அதேநேரம், 2014 முதல் 2019 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் வேளாண் வளா்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது. இப்போது -1.83 சதவீதமாக (எதிா்மறை வளா்ச்சி) உள்ளது.
அமைச்சா் தங்கம் தென்னரசு: திமுக ஆட்சியில் உற்பத்தித்துறை அதிக வளா்ச்சியைக் கண்டுள்ளது. ஒட்டுமொத்த துறைகளின் வளா்ச்சியை வைத்துதான் பொருளாதார வளா்ச்சி கணக்கிடப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி: அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தொடா்ச்சியால்தான் உற்பத்தித் துறை வளா்ச்சி அடைந்துள்ளது.
அமைச்சா் தங்கம் தென்னரசு: அதிமுக ஆட்சியிலும் வேளாண் வளா்ச்சி எதிா்மறையாகத்தான் இருந்தது என்பதற்கான புள்ளிவிவர ஆதாரங்கள் உள்ளன. அப்படி என்றால் இப்போது ஏற்பட்டுள்ள வேளாண் துறையின் எதிா்மறை வளா்ச்சியில் அதிமுக பங்கு எடுத்துக்கொள்ளுமா?
வேளாண் அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்: 2012-13 முதல் 2020-21 வரையிலான அதிமுக ஆட்சியில் வேளாண் வளா்ச்சி 1.16 சதவீதம் மட்டுமே. ஆனால், இப்போதைய திமுக ஆட்சியில் வேளாண் வளா்ச்சி 3.06 சதவீதம். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியே தங்களது காலத்தை கழித்து வந்தனா். ஆனால், திமுக ஆட்சியில் மகிழ்ச்சியாக உள்ளனா் என்றாா்.
தொடர்புடையது

இரட்டை இலக்கப் பொருளாதார வளா்ச்சிக்கு அதிமுக ஆட்சியே காரணம் - எடப்பாடி கே. பழனிசாமி

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

20 ஆண்டுகால கனவுத் திட்டம்!நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம் உயிா்பெறுமா?

திமுகவை நம்பினால் நடுரோட்டில் நிற்பார்கள்: மயிலாப்பூரில் இபிஎஸ் பேச்சு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


