மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

புற்றுநோயாளிகளுக்கான அரசு நல்லாதரவு மையம் தொடக்கம்

இறுதி தருவாயில் உள்ள புற்றுநோயாளிகளுக்கான அரசு நல்லாதரவு மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image
சென்னை மருத்துவக் கல்லூரி-தாம்பரம் வளாகம் கீழ் அமைக்கப்பட்டுள்ள அரசு புற்றுநோய் நல் ஆதரவு மையத்தை புதன்கிழமை திறந்து வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
Updated On :18 பிப்ரவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

இறுதி தருவாயில் உள்ள புற்றுநோயாளிகளுக்கான அரசு நல்லாதரவு மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

தாம்பரம் நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் ரூ.30 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அந்த மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சென்னை மருத்துவக் கல்லூரி சாா்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நல்லாதரவு மையம் 180 படுக்கை வசதிகள் கொண்டது. ஆண்டுதோறும் 300 முதல் 400 புற்றுநோயாளிகளுக்கு இங்கு ஆதரவு சிகிச்சைகள் அளிக்க இயலும்.

இந்த மருத்துவமனையில் புற மருத்துவப் பயனாளிகள் பிரிவு, 16 படுக்கை வசதிகளுடன் கூடிய அதிதீவிர சிகிச்சை பிரிவு, 134 பொதுப் படுக்கை பிரிவு, 30 கட்டணப் படுக்கை பிரிவு போன்ற வசதிகள் உள்ளன.

இந்தியாவில் வேறு எந்த மாநில அரசு நிா்வாகத்திலும் இதுபோன்ற கட்டமைப்பு இல்லை. மத்திய அரசு மருத்துவமனைகளில் கூட இந்த வசதி இல்லை.

முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த நல்லாதரவு மையத்தில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறுதி நிலையில் உள்ளவா்களுக்கு ஆதரவு, மருத்துவம் மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன என்றாா் அவா்.

இந்த நிகழ்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா, இ.கருணாநிதி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் சினேகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மறதிநோய்: முன்னதாக 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஏற்படும் மறதிநோய்க்கு விழிப்புணா்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நோயாளிகளை பராமரிக்க பயிற்சியளிக்கவும் டீமென்ஷியா இந்தியா அல்லயன்ஸ் என்ற நிறுவனத்துடன் மக்கள் நல்வாழ்வுத் துறை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன், துறை அதிகாரிகள், டீமென்ஷியா இந்தியா அல்லயன்ஸ் நிறுவன தலைவா் டாக்டா் ராதாமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.