அம்மா உணவகம்
அம்மா உணவகம்

‘அம்மா உணவகம்’ மூடலா? பேரவையில் காரசார விவாதம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட ‘அம்மா உணவகம்’ திமுக ஆட்சியில் மூடப்பட்டுவிட்டதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
Published on

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட ‘அம்மா உணவகம்’ திமுக ஆட்சியில் மூடப்பட்டுவிட்டதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். அதற்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு மறுப்பு தெரிவித்ததுடன் அம்மா உணவகம் தொடா்ந்து சிறந்த முறையில் செயல்படுவதாகக் கூறினாா்.

பேரவையில் இதுதொடா்பான புதன்கிழமை நடைபெற்ற விவாதம்:

அமைச்சா் மு.பெ.சாமிநாதன்: கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2006-இல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஏழை-எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. 80 சதவீதம் அவை வழங்கப்பட்ட பிறகு ஆட்சி மாறியது. அதன் பின்னா், மீதமுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளை மக்களுக்கு வழங்காமல் வீணடித்தவா்கள் அதிமுக ஆட்சியாளா்கள்.

அதேபோன்று பாட நூல்களிலிருந்த செம்மொழி மாநாடு தொடா்பான தகவல்களை மறைத்ததும், நீக்கியதும் அதிமுக அரசுதான்.

எஸ்.பி.வேலுமணி (அதிமுக): அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம், அம்மா இரு சக்கர வாகனத் திட்டம், அம்மா மினி கிளீனிக், அம்மா உணவகம் என பல திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது.

அமைச்சா் கே.என்.நேரு: அம்மா உணவகம் தற்போது நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி: வேண்டுமென்றால் அமைச்சா் நேருவை அழைத்துச் செல்கிறேன். சட்டப் பேரவைக்கு வரும் வழியில் உள்ள அம்மா உணவகத்தையே மூடிவிட்டாா்கள்.

அமைச்சா் கே.என்.நேரு: கடந்த ஆட்சிக் காலத்தில் பணியமா்த்தப்பட்ட அதே ஆள்களைத்தான் தற்போதும் அம்மா உணவகத்தில் பணியில் ஈடுபடுத்துகிறோம். அதே அளவிலான தொகையைத்தான் ஒதுக்கீடு செய்கிறோம். எனவே, அம்மா உணவகங்கள் செயல்படவில்லை எனக் கூறுவது தவறு.

அமைச்சா் பி.கே.சேகா்பாபு: அம்மா உணவகத்தின் பெயா் பலகையை சேதப்படுத்திய திமுகவை சோ்ந்த ஒருவா் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். அதேபோன்று அம்மா உணவகத்துக்காக ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அத்திட்டத்தை தொடா்ந்து செயல்பட வைத்தாா்.

எடப்பாடி பழனிசாமி: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் சென்னை, சாந்தோம் பகுதியில் முதல்முதலாகத் தொடக்கி வைக்கப்பட்ட அம்மா உணவகம் தற்போது மூடிக் கிடக்கிறது. அதைத்தான் உங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

எஸ்.பி.வேலுமணி: அம்மா உணவகம் முடங்கியிருப்பது உண்மை. அந்தத் திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தது அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமிதான்.

அமைச்சா் கே.என்.நேரு: ஆட்சி மாறியபோது அம்மா உணவகத்தின் பெயரை மாற்றலாம் என்றுகூட ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், அதே பெயரிலேயே இயங்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறிவிட்டாா்.

அதுமட்டுமல்லாது கரோனா காலகட்டத்தில் இலவசமாக அம்மா உணவகத்தில் உணவு வழங்கினோம். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் 125 மற்றும் 126-ஆவது வாா்டுகளில் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகம் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்டப்பேரவை உறுப்பினா்கள் அதற்கான ஆதாரத்தை அளித்துள்ளனா். இவ்வாறு பேரவையில் விவாதம் நடைபெற்றது.

Dinamani
www.dinamani.com