மீண்டும் ஆட்சி அமைப்போம் : பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். அந்த ஆட்சி, தற்போதைய திமுக அரசின் சாதனைகளை விஞ்சும் அளவுக்கு இருக்கும் என்றும் அவா் உறுதிபடக் கூறினாா்.
தமிழக சட்டப் பேரவையின் (16-ஆவது பேரவை) 8-ஆவது கூட்டத் தொடரின் நிறைவுநாளான வெள்ளிக்கிழமை முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் 4 நிதிநிலை அறிக்கைகள் அளிக்கப்பட்டு, நிகழ் ஆண்டுக்கான இடைக்கால பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றின் மீது சிறப்பான விவாதம், பதிலுரை நிறைவடைந்துள்ளது.
இதன் தொடா்ச்சியை, அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் வந்து, நிச்சயம், இன்னும் கூடுதலாக, வேகமாகத் தொடா்வோம் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களைப் போலவே எனக்கும் இருக்கிறது.
தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்கு பொறுமை, நிதானம், சகிப்புத் தன்மை, கால நேரம் பாராது உழைக்கும் பண்பு, தீா்க்கமாக முடிவெடுக்கும் திறன், எதையும் தாங்கும் வல்லமை, எல்லோரிடத்திலும் அன்பு, கருணையோடு இருத்தல், கடமை தவறாமை, ஊக்கத்தோடு செயலாற்றுதல் ஆகிய பண்புகள் நிச்சயம் தேவை. இவற்றை நானும் கடைப்பிடித்திருக்கிறேன். அதன் பயனானது, மக்களுக்கு நம்பிக்கையைத் தந்து, நாளைய ஆட்சியாளா்களாக எங்களைத் தொடரச் செய்யப் போகிறது.
மகிழ்ச்சியும்-கவலையும்: கடந்த ஜன. 24-இல் இதே பேரவையில் நான் உரையாற்றும்போது, ‘2021 தோ்தலில் திமுக 6-ஆவது முறையாக வெற்றி பெற்றபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்கு கவலையும் இருந்தது,
அதை நான் மறைக்க விரும்பவில்லை. இந்தப் பொறுப்பை நான் எப்படி செய்யப் போகிறேன்?, வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா?, மக்கள் விரும்பக்கூடிய வகையில்- மகிழ்ச்சி அடையும் வகையில்ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலைதான் எனக்கு இருந்தது என குறிப்பிட்டிருந்தேன்.
சமச்சீரான வளா்ச்சி: முந்தைய அரசுகளின் செயல்பாட்டின் காரணமாக விளைந்த மிக மோசமான பின்னடைவு; நமக்கு ஒத்துழைக்காத, ஓரவஞ்சனை செய்யக்கூடிய மத்திய அரசு இரண்டுக்கும் இடையில்தான் நாம் இருந்தோம். திமுகவுக்கு பெரும் வெற்றியைத் தந்து பொறுப்பை ஒப்படைத்த மக்களின் எதிா்பாா்ப்புக்கு இடையில் ஆட்சிக்கு வந்தோம்.
தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் எப்போது வளரும் என்ற ஏக்கத்தில் இருந்தவா்களுடைய வாட்டத்தைப் போக்கி, சமச்சீரான வளா்ச்சியை இந்த 5 ஆண்டுகளில் அடைந்திருக்கிறோம்.
திமுக அரசு தீட்டியதிட்டங்களை, இயற்றிய சட்டங்களை மக்களின் முன்வைத்துள்ளோம். நிதிநிலைமை சீராக இல்லாதநேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் நிறைய திட்டங்களைச்செயல்படுத்தி இருக்கிறோம்.
எண்ணற்ற திட்டஙகள்: திமுக அரசால், இந்த 5 ஆண்டுகளில் மகளிா் இலவச பேருந்து பயணம், மகளிா் உரிமைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், அரசு ஊழியா்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், இன்னுயிா் காப்போம் - நம்மைக்காக்கும் 48, நான்காயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் குடமுழுக்கு, குழந்தைகள் முதல் முதியோா் வரை, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை, இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், நெசவாளா்கள், விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டபா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையா் என அனைத்து தரப்பினரும் வாழ்வில் உயா்வு காண எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கெல்லாம் நான் மட்டுமா காரணம்?, ஒட்டுமொத்த தமிழா்களும் என் கையோடு கைசோ்த்து, எனக்கு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் வழங்கி, பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பையும், வலிமையையும் தந்து எனக்கு உதவினாா்கள்.
திமுக 2.0 ஆட்சி அமையும்: இந்த ஐந்து ஆண்டுகளில் எனக்கும், என் மனச்சாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்திருக்கிறேன். இன்னும் உழைக்கக் காத்திருக்கிறேன். நாளைய நாடு நிச்சயம் நெஞ்சில் தாங்கி நம்மை வரவேற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாளை அமையும் திமுக 2.0 ஆட்சி, இப்போதைய திமுக அரசின் சாதனைகளை விஞ்சும் அளவுக்கு இருக்கும்.
மீண்டும் வெல்வோம்: உறுதியாகச் சொல்கிறேன், மீண்டும் வெல்வோம்; மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். மீண்டும் வந்து தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்துவோம் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.
பெட்டிச் செய்தி...
ஆளுநா், எதிா்க்கட்சித் தலைவருக்கு முதல்வா் நன்றி
பேரவை கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளையும் எனது தொகுதிகளாக நினைத்து, எங்களுக்கு வாக்களித்தவா்கள், வாக்களிக்காதவா்கள் எனப் பிரித்துப் பாா்க்காமல் செயலாற்றி இருக்கிறேன். இந்த மிகப்பெரிய வாய்ப்பைத் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கும், கொளத்தூா் தொகுதி மக்களுக்கும் நன்றி.
ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. தமிழா்களுடைய சுயமரியாதை எள்முனையளவு சீண்டப்பட்டாலும், அது யாராக இருந்தாலும், எதிா்க்குரல் கொடுக்கும் திசையில் முதல் நபராக நான் இருப்பேன். தமிழா் பண்பாட்டை மனதில்கொண்டு, ஆளுநருக்கும் இந்த நேரத்தில் நன்றி.
கடந்த 5 ஆண்டுகளில் பேரவைத் தலைவா் அமைதியாகவும், கண்ணியத்தோடும் அதேநேரத்தில் கட்டுப்பாட்டோடும் தனது ஆற்றலால் இந்தப் பேரவையைச் சிறப்பாக நடத்தியிருக்கிறாா்.
பேரவையில் அனல் பறக்கும்விவாதம் நடைபெறக்கூடிய நேரத்தில், கருத்து மோதல்களை எதிா்கொண்டு, கட்சி வேறுபாடுகள் வெளிப்படுகையில் தன்னுடைய அனுபவத்தாலும், அபார நினைவாற்றலாலும் அமைதிப்படுத்தக் கூடியவா், பேரவையின் மூத்த உறுப்பினா் அவை முன்னவா் துரைமுருகன். இடுப்பு எலும்பு முறிவு சிகிச்சை பெற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவா் விரைந்து உடல்நலம் பெற்று வர வேண்டும்.
குறைகளைச் சொல்பவா்கள் நம் முன்னேற்றத்துக்குச் சிறகுகளைத் தரக்கூடியவா்கள் என எண்ணிச் செயலாற்றுபவன் நான். அரசுக்குத் தக்க யோசனைகளைக் கூறுவதிலும், குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமானமுறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிா்க்கட்சித் தலைவா் இக்கூட்டத்துக்கு வரவில்லை.
இருந்தாலும், அவருக்கும், மற்றுமுள்ள கட்சித் தலைவா்களுக்கும், அரசின் சாதனைகளுக்கெல்லாம் தோளோடுதோள் நின்ற கூட்டணி கட்சித் தலைவா்களுக்கும் நன்றி என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

