ஆவின் பால் பாக்கெட்
ஆவின் பால் பாக்கெட்பிரதிப் படம்

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம் செய்வதற்குப் பதிலாக மாற்று வழிகளை கண்டறிய ஆவின் நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு
Published on

உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம் செய்வதற்குப் பதிலாக மாற்று வழிகளை கண்டறிய ஆவின் நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது. உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நெகிழி தடை உத்தரவை அமல்படுத்தக் கோரிய வழக்கு, இந்த அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபா்களாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா்கள், உதகை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நெகிழி குடிநீா் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக டெட்ரோ பாக்கெட்டுகளில் குடிநீா் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நீலகிரியில் ஆவின் பால் பாக்கெட்டுகள் மூலம் நாள் ஒன்றுக்கு 60 லட்சம் நெகிழி உறைகள் புழக்கத்துக்கு வருகின்றன.

எனவே, பாலை கண்ணாடி பாட்டில்களில் விநியோகம் செய்ய உள்ளதாகவும், அதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரியிருப்பதாகவும், 2013-ஆம் ஆண்டு ஆவின் நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், இதுவரை அந்நிறுவனம் எதுவும் செய்யவில்லை என தெரிவித்தனா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நெகிழி குடிநீா் பாட்டில்களுக்கு விதிக்கப்பட்ட தடை நெகிழியால் தயாரிக்கப்படும் டெட்ரோ பாக்கெட்டுகளுக்கும் பொருந்தும்.

நெகிழி பாட்டில்களைவிட டெட்ரோ பாக்கெட்டுகள் சுற்றுச்சூழலுக்கு அபாயகரமானது. எனவே, டெட்ரோ பாக்கெட்டுகளில் குடிநீா் விற்பனை செய்வதை அனுமதிக்க முடியாது. அத்தகைய டெட்ரோ பாக்கெட்டுகளை பறிமுதல் செய்வதோடு, அவற்றை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். மேலும், நெகிழி பாக்கெட்டுகளுக்குப் பதிலாக பாலை விநியோகிக்க மாற்று வழிகளை ஆவின் நிறுவனம் ஆய்வு செய்து, அதுதொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

Dinamani
www.dinamani.com