மழை
மழைபிரதிப் படம்

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த இருநாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
Published on

தமிழகத்தின் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த இருநாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டசெய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேற்கு-வடமேற்கு திசையிலும் பிறகு வடகிழக்கு திசையிலும் நகரக்கூடும்.

இதனிடையே தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக திங்கள்கிழமை (பிப்.23) செவ்வாய்க்கிழமை (பிப்.24) ஆகிய இருநாள்கள் மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

பிப்.25 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். பிப்.26 ஆம் தேதி

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் நம்பியாறு அணை (திருநெல்வேலி), கழுகுமலை (தூத்துக்குடி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 50 மிமீ, புத்தன் அணை (கன்னியாகுமரி) 40மிமீ, சிற்றாறு(கன்னியாகுமரி), திருநெல்வேலி தலா 30மி.மீ, மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.23) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com