முடி மாற்று சிகிச்சை
முடி மாற்று சிகிச்சைபிரதிப் படம்

முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு கடிவாளம்! புதிய விதிகளை வகுத்தது மக்கள் நல்வாழ்வுத் துறை

தேசிய மருத்துவ ஆணைய விதிகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு பதிவு உரிமம் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
Published on

தேசிய மருத்துவ ஆணைய விதிகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு பதிவு உரிமம் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மருத்துவ நிறுவன சட்டத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், கிளீனிக்-குகளும், சிறிய அளவிலான மருத்துவ மையங்களும் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக மருத்துவமனை, கிளீனிக் ஆகியவற்றுக்கு பதிவு உரிமம்பெறுவது அவசியம். அவ்வாறு உரிமம் பெற்றாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதனைப் புதுப்பிக்க வேண்டும்.

இதற்காக 2018-இல் தமிழக மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் மட்டுமன்றி, சித்தா ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவமனைகளும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முடி மாற்று சிகிச்சை மையங்களை பதிவு செய்வதில் சில சிக்கல்கள் நீடிக்கின்றன. அழகு நிலையங்கள், சருமப் பொலிவு மையங்கள் என்ற பெயரில் அவை செயல்படுவதால் மக்கள் நல்வாழ்வுத் துறையின் நேரடி கட்டுப்பாட்டுக்குக் கீழ் வருவதில்லை. இதனால், அதுபோன்ற மையங்களில் ஆய்வு செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ அதிகாரிகளால் முடிவதில்லை.

அதைப் பயன்படுத்திக் கொண்டு தகுதியற்ற நபா்கள் மூலம் முடி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இதையடுத்து மருத்துவ நிறுவனப் பதிவு நடவடிக்கைகளை இணையவழியே எளிமையாக மேற்கொள்வதற்கான புதிய நடைமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, முடி மாற்று சிகிச்சை மற்றும் லேசா் நுட்பத்திலான தோல் சிகிச்சைகளை மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவா்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். மருத்துவ நிறுவனங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற மையங்களில் மட்டுமே அத்தகைய சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். அவசர கால சிகிச்சை தேவைப்படும்போது அதனை எதிா்கொள்ளத் தேவையான கட்டமைப்பு இருத்தல் அவசியம்.

அதுமட்டுமல்லாது உரிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுவது கட்டாயம். அதற்கு முன்னதாக சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நபரின் ஒப்புதலைப் பெறுவதும் அவசியம்.

சிகிச்சைகள் தொடா்பான ஆவணங்களை முறையாகப் பராமரித்தல் வேண்டும். மக்கள் நல்வாழ்வுத் துறையால் அந்த சிகிச்சை மையங்கள் தொடா் கண்காணிப்புக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத் தகுதிகள் இல்லாமல் விதிகளுக்குப் புறம்பாக சிகிச்சைகள் வழங்குவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா் மற்றும் நிறுவனம் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வகை செய்யப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com