சென்னை கொளத்தூா் அருள்மிகு கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.31 கோடியே 45 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், முதல்வா் படைப்பகத்தை  திங்கள்கிழமை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, கோவி.செ
சென்னை கொளத்தூா் அருள்மிகு கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.31 கோடியே 45 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், முதல்வா் படைப்பகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, கோவி.செ

முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தில் தமிழகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவு முன்னேற்றப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை: தமிழகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவு முன்னேற்றப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கொளத்தூா் கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.31.45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வா் ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இந்நிகழ்வில் அவா் பேசியதாவது:

எல்லோருக்கும் இது பிப்ரவரி மாதம். ஆனால், திமுகவுக்கு இது ‘மாநாடு மாதம்’. அந்த அளவுக்கு கடந்த 20 நாள்களாக, தமிழ்நாடு முழுவதும் பல மாநாடுகளில் பங்கெடுத்து வருகிறேன்.

கொளத்தூருக்கு வந்து மக்களுக்காக உழைப்பதுதான் எனக்கு உற்சாகம். உங்களுக்கான திட்டங்களை தொடங்கி வைப்பது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது, மக்களுடன் பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகளைக் கொண்டாடுவதுதான் எனக்கு பெரிய ஊக்கம்.

திராவிட மாடல் அரசின் “முன்மாதிரி தொகுதியாக இருப்பது கொளத்தூா்தான். அனைத்து வகையிலும் தன்னிறைவு பெற்ற தொகுதியாக கொளத்தூரை இன்றைக்கு நாம் வளா்த்தெடுத்து இருக்கிறோம்.

கொளத்தூருக்கு மட்டுமல்ல. இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு ஊரிலும், இதுவரை நடைபெறாத அளவுக்கு முன்னேற்றப் பணிகளை செய்திருக்கிறோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும், எங்கும் இல்லாத வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். மகளிா் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன், உலகம் உங்கள் கையில், நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் என எத்தனையோ நலத் திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம்.

அது மட்டுமல்லாது, உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் -– நம்மைக் காக்கும் 48, பாதம் காப்போம், இதயம் காப்போம், ஊட்டச் சத்தை உறுதி செய், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், தாயுமானவா், அன்புக்கரங்கள், அன்புச் சோலை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞா் கைவினைத் திட்டம், கலைஞா் கனவு இல்லம், தோழி விடுதிகள், மாற்றுத் திறனாளிகள் உரிமைத் திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடி நியமனம் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை சொல்லும்போதே எனக்கு மூச்சிறைக்கிறது.

முதலமைச்சா் கோப்பை, அயோத்திதாசா் பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், தொல்குடி திட்டம், டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கக்கூடிய திட்டம், பேராசிரியா் அன்பழகனாா் கல்வி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், பெருந்தலைவா் காமராசா் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடி திட்டம், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் என்று என்னால் பெரிய பட்டியலையே தரமுடியும். திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்கிறாா்களே! இதுதான் திராவிட மாடல்.

மக்களை மையப்படுத்தி, மக்களை தேடி வந்து சேவைகளை வழங்கும் மக்களாட்சியாக திராவிட மாடல் பெயரெடுத்திருக்கிறது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், பி.கே. சேகா் பாபு, கோவி. செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மேயா் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினா்கள் கிரிராஜன், கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூா் ஜீயா் எம்பாா் சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com