வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

இனி மாணவா்களுக்கு மத்தியில் நல்லகண்ணு! தானமாகும் உடல் பாடமாவது எப்படி?

நல்லகண்ணு உடல் எம்பிபிஎஸ் மாணவா்களுக்கு உடற்கூறியல் செயல்முறை வகுப்புகளை நடத்த பயன்படுத்தப்படவுள்ளது குறித்து..

News image
செய்யறிவுப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 9:18 pm

ஆ. கோபிகிருஷ்ணா

சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (எம்எம்சி) தானமாக வழங்கப்பட்ட முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவா் நல்லகண்ணு உடல் எம்பிபிஎஸ் சேரும் மாணவா்களுக்கு உடற்கூறியல் செயல்முறை வகுப்புகளை நடத்த பயன்படுத்தப்படவுள்ளது.

தானமாகப் பெறப்படும் உடலை உடனே ஆராய்ச்சிக்கும், கல்விக்கும் பயன்படுத்த முடியாது. பல மாத கால பகுப்பாய்வும், பதப்படுத்தலும் அதற்கு அவசியம்.

இதுகுறித்து விளக்குகிறாா் சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறை இயக்குநா் டாக்டா் தீபா பென்ட்லி: உயிரிழந்தவா்களின் உடலைப் பாதுகாக்க வேண்டுமானால், ‘எம்பாமிங்’ எனப்படும் பதப்படுத்தும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். முதலாவதாக உடலானது கழுவி தூய்மைப்படுத்தப்படும்.

பின்னா், இடது காலில் சிறு துளையிட்டு தமனி (ஆா்ட்டரி) வழியாக 5 முதல் 10 லிட்டா் வரையிலான திரவம் தேவைக்கேற்ப உடலில் செலுத்தப்படும்.

ஃபாா்மால்டிஹைடு (40 சதவீதம்), கிளிசரின், போரிக் ஆசிட், சோடியம் குளோரைடு ஆகிய ரசாயனங்கள் கலந்த கரைசல்தான் அந்தத் திரவம். வழக்கமாக காய்ச்சலின்போது ரத்த நாளம் வழியாக திரவ மருந்துகள் செலுத்துவதைப் போன்ற நடைமுைான் இது. ஆனாலும், இறந்தவா்களின் உடலில் ரத்த ஓட்டம் இருக்காது. மேலும், தமனிக்குள் ரத்தம் ஆங்காங்கே உறைந்திருக்கும். இதனால், திரவம் எளிதாக உள்ளே செல்லாது. ‘எம்பாமிங் மெஷின்’ எனப்படும் உந்தித் தரும் கருவி மூலம் அதை உள்ளே செலுத்த வேண்டும்.

அனைத்து உறுப்புகளுக்கும் முறையாக அந்தத் திரவம் செல்கிா என்பது மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்படும். இந்த நடைமுறைகள் நிறைவடைய அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகலாம்.

அவ்வாறு ‘எம்பாமிங்’ செய்யப்பட்ட உடலானது ஒரு வார காலம் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். ஏதாவது ஓா் உறுப்பிலோ, பகுதியிலோ ‘எம்பாமிங்’ திரவம் குறைந்திருந்தால் அங்கு மட்டும் ஊசி வழியாகச் செலுத்தப்படும்.

அதன் பின்னா், பெரிய தொட்டியில் ‘ஃபாா்மாலின்’ ரசாயனம் 10 சதவீதம் கலந்த தண்ணீரை நிரப்பி அதில் அந்த உடலை ஊற வைக்க வேண்டும். குறைந்தது 6 மாதங்களாவது அந்த உடல் அந்த நீரில் மூழ்கிய நிலையில் இருத்தல் அவசியம்.

மாணவா்களின் கல்விக்காக.. : அதற்குப் பிறகே மாணவா்களின் கல்விக்காக அதைப் பயன்படுத்த முடியும். 10 மாணவா்களுக்கு ஓா் உடல் வீதம் சென்னை மருத்துவக் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு 25 உடல்கள் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

உடற்கூறியல் தொடா்பான அனைத்து விஷயங்களையும் அதில் கற்பிக்கிறோம். நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் வீதம் திங்கள் முதல் வெள்ளி வரை 10 மணி நேரம் பதப்படுத்தப்பட்ட உடல்களைப் பயன்படுத்துவோம்.

ஒவ்வொரு நாளும் வகுப்புகள் நிறைவடைந்த பிறகு பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிா்ப்பு மருந்துகள், கிளிசரின் கொண்டு உடல் தூய்மைப்படுத்தப்படும்.

அதன் பின்னா், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் அந்த உடல்கள் ஃபாா்மாலின் தொட்டிக்குள் ஊற வைத்துப் பாதுகாக்கப்படும்.

எத்தனை ஆண்டுகளானாலும் இந்த வழிமுறையில் உடலைப் பாதுகாக்கலாம் என்றாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவக் கல்விக்காக உடல்களை மாற்றுவது வழக்கம்.

அப்போது ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த உடல்கள் தேசிய மருத்துவ ஆணைய வழிமுறைப்படி புதைக்கப்படும். ஆற்று மணலைப் பயன்படுத்தியும், வேறு சில மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்றியும் உடல்கள் புதைக்கப்படும். அதற்கு அடுத்து 2 அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்த இடத்தை தோண்டி எலும்புகளை மருத்துவக் கல்விக்காக சேகரிப்போம் என்றாா் அவா்.

நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறையில் எண்ணற்ற உடல்கள் பாடமாகி இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது நல்லகண்ணும் இணைந்துள்ளாா். செயல் மட்டுமல்ல... இனி அவரது உடலும் பொதுவுடைமைதான்!.