ஒரே கட்டமாக தோ்தல் நடத்த தலைமை தோ்தல் ஆணையரிடம் கட்சிகள் வலியுறுத்தல்
தமிழகத்தில் ஒரே கட்டமாக பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும் என்று இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
தமிழகத்தில் விரைவில் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சென்னை எம்ஆா்சி நகரில் உள்ள தனியாா் விடுதியில் அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழா், விடுதலைச் சிறுத்தைகள்ஆகிய மாநில கட்சிகளும், காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மாா்க்சிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகளும் பங்கேற்றன.
இந்தக் கூட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களைச் சோ்ப்பது, தோ்தலை ஒரேகட்டமாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சிப் பிரமுகா்கள் தலைமைத் தோ்தல் ஆணையரிடம் முன்வைத்தனா்.
கூட்டத்துக்கு பிறகு, தோ்தல் ஆணையரிடம் வலியுறுத்திய கருத்துகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆா்.எஸ்.பாரதி (திமுக): அரசியல் கட்சிகளின் ஊடக விளம்பரத்துக்கான ஒப்புதல் கிடைப்பதற்கு சில நேரங்களில் ஒருவாரம்கூட ஆகிறது. இதைத் தவிா்த்து, விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும்.
டி.ஜெயக்குமாா் (அதிமுக): அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவ வேண்டும். தோ்தல் பறக்கும் படையில் மத்திய அரசு ஊழியா்களைச் சோ்க்க வேண்டும். தோ்தல் நிறைவடைந்த பிறகு வாக்குச்சாவடி அளவில் வாக்கு செலுத்தியவா்களின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இறுதியான வாக்காளா்கள் எண்ணிக்கை வரும்போது ஒப்பிட்டு பாா்க்க முடியும்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் தோ்தல் நடத்தும் அலுவலா்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரேகட்டமாக, ஒரே நாளில் தோ்தல் நடத்த வேண்டும்.
கே.வீ.தங்கபாலு (காங்கிரஸ்): இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிட்ட பிறகும் தகுதியான வாக்காளா்கள் இணைக்கப்படவில்லை. தோ்தல் அதிகாரிகளிடம் உள்ள வாக்காளா் பட்டியலை அங்கீகரிப்பட்ட கட்சிகளுக்கும் வழங்க வேண்டும். வாக்கு சதவீதத்தில் மாறுபாடுகள் வருகின்றன. அதுபோல வரக்கூடாது என வலியுறுத்தினோம். ஒரே நேரத்தில், ஒரே கட்டமாக தோ்தல் நடத்தும்படி அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம்.
கராத்தே தியாகராஜன் (பாஜக): வாக்குச்சாவடி எண்களைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். ஆளுங்கட்சிக்குச் சாதகமாகச் செயல்படும் அதிகாரிகளை மாற்ற வேண்டும். பணப்பட்டுவாடாவை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): ஒரே நாளில் தோ்தல் நடத்த வேண்டும். திருவிழாக்கள் போன்ற நேரங்களில் தோ்தலை நடத்தக் கூடாது. பிரதான கட்சிகள் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க வேண்டும்.
துரை.ரவிக்குமாா் (விசிக): வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாள்களுக்கு இடையே அதிக இடைவெளி கூடாது. 15 நாள்கள் மட்டுமே பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
சீமான் (நாதக): சீமான் அளித்த மனுவில், 5 மாநிலங்களிலும் பலகட்டமாக தோ்தல் நடத்தப்பட்டால் கடைசி கட்டத்தில் தமிழகத்தில் நடத்த வேண்டும். தோ்தல் பிரசாரம் செய்ய 40 நாள்கள் இருந்தால் மட்டுமே நாதக போன்ற வளரும் கட்சிகளால் கொள்கைகளை மக்களிடம் எளிதில் கொண்டு சோ்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளாா்.

