இந்திய வரலாற்றில் சவாலான நேரங்களில் துணிச்சலுடன் செயலாற்றியவர் ராம்நாத் கோயங்கா: சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியது பற்றி...
C.P. Radhakrishnan speech in ramnath goenka sahitya samman awards function
ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியபோது...
Updated on
3 min read

இந்திய வரலாற்றில் சவாலான நேரங்களில் துணிச்சலுடன் செயலாற்றியவர் ராம்நாத் கோயங்கா என ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று(ஜன. 2) நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் - மேலாண் இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து விழாவின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பின்னர் விருது பெறத் தேர்வான இலக்கிய படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

விருதுகள் வழங்கும் விழாவில்...
விருதுகள் வழங்கும் விழாவில்...

விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

"இலக்கியத்தின் சக்தியை கொண்டாடும் வகையில், ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது விழாவில் நாம் இங்கு கூடியிருக்கிறோம். பயமில்லாத கருத்துகளை வெளிப்படுத்தும் யோசனைகள்தான் இலக்கியமும் இதழியலும். அச்சமின்றி கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறுவது மிகவும் எளிது. இப்போது அது அரிதாகவே வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால், முன்பு பயமின்றி கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. அதற்கு காரணம் நிறுவனர் ராம்நாத் கோயங்கா.

எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவுசார் தலைவர்கள் ஆகியோரை இந்த விழா ஒன்றிணைக்கிறது. இவர்கள் சிறந்த எழுத்துகள், சிந்தனைகள் மூலமாக இந்த சமூகத்தில் மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துகின்றனர்.

இலக்கியம் மற்றும் இதழியல் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம், சிந்தனைமிக்க, பொறுப்புள்ள நாட்டை வடிவமைக்கிறது. ஒரு நல்ல, பயமற்ற பத்திரிகைத் துறை மற்றும் ஆழ்ந்த இலக்கியம் இன்றி ஒரு நாடு வளராது.

இந்திய மக்களின் பொது வாழ்க்கைக்கு வழிகாட்டிய மற்றும் பயமில்லாத இதழியல் துறைக்கு வித்திட்ட ராம்நாத் கோயங்காவுக்கு எனது அஞ்சலிகள். இந்திய வரலாற்றில் சவாலான நேரங்களில் பத்திரிகை நேர்மை, அறிவுசார், துணிச்சலுடன் செயலாற்றியவர்.

அவருடைய வாழ்க்கை நமக்கு நினைவூட்டுவது என்னவென்றால், உண்மை என்பது நம்முடைய வசதிக்கானது அல்ல. அவருடைய சுதந்திரமான சிந்தனை, நமக்கு தைரியம் மற்றும் நம்பிக்கையை அளிக்கிறது. தைரியம், நம்பிக்கைக்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டு. இந்திய ஜனநாயகத்தின் மீது கவனம் செலுத்தி தன்னுடைய பயமற்ற கருத்துக்களின் வெளிப்பட்டால் பல தலைமுறைகளைக் கவர்ந்தவர். சிந்தனைகள் சுதந்திரமாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியவர்.

கேள்விகள் கேட்கப்பட வேண்டும், அதைவிட முக்கியம் அந்த கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கப்பட வேண்டும் என்று கூறியவர். முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு அந்த பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.

நான் சிறுவயதில் தினமணி நாளிதழைப் பார்த்திருக்கிறேன். தலைப்புச் செய்தி அருகே ஒரு பெட்டிச் செய்தி இருக்கும். அந்த நாள்களில் அந்த இடத்தில் உள்ள விஷயத்தைப் படித்ததாலேயே இன்று இங்கே நான் குடியரசு துணைத் தலைவராக இருக்கிறேன்.

நான் சிறுவயதில் இருந்தபோது என் அம்மா எனக்கு ஆன்மிகம் பற்றியும் தேசப்பற்று குறித்தும் என்னிடம் கூறுவார். எல்லா நேரங்களிலும் அதுவே என் சிந்தனையில் இருந்தது. எனவே, ஒவ்வொருவரின் வாழ்க்கையை வடிவமைப்பதிலும் தாய் முக்கிய பங்கு வகிக்கிறார்.

விருது பெற்றவர்களுடன்..
விருது பெற்றவர்களுடன்..

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், முதல் குடியரசு துணைத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் குறித்து நாம் பேசுகிறோம். அவர் பல தத்துவமிக்க புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது புத்தகம் துருக்கி அரசால் தடை செய்யப்பட்டது. ஹிந்து ஒரு மதம் அல்ல, அது வாழ்க்கையின் வழி. ஆனால், புத்தகம் தடை செய்யப்பட்டது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஜனசங்கம் அதுபற்றி கேள்வி எழுப்பியது. அந்த இயக்கத்தை ஓராண்டாகத் தேடி அதில் இணைந்ததன் காரணமாக இன்று குடியரசு துணைத் தலைவர் ஆகியிருக்கிறேன். அதனால் தினமணி எப்போதும் வாசிப்பதற்கு மட்டுமல்ல, தினமணி வாழ்க்கைக்காகவும்கூட. தினமணி பலரின் வாழ்க்கையை வடிவமைத்துள்ளது. நானும் அதில் ஒருவன். அதனை இந்த நாளில் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொண்டிருக்கிறேன்.

நான் 17 வயதில் புரட்சி இயக்கத்திற்கு கோவையின் பொதுச் செயலாளர் ஆனது எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அந்த புரட்சியில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. அதன்பிறகே 'அவசர நிலை' அறிவிக்கப்பட்டது. அந்த அவசர நிலையை எந்த பயமுமின்றி எதிர்த்தவர் ராம்நாத் கோயங்கா. பிரிட்டிஷ் காலத்தில் பாரதி புதுச்சேரி சென்றுதான் தன்னுடைய இதழ்களை வெளியிட்டார். அப்படியான நிலைதான் இருந்தது.

எழுத்தின் சக்தி, பேச்சாளர்களின் சக்தி பற்றி அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி, அண்ணா போன்ற திறமைவாய்ந்த பேச்சாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், ராம்நாத் கோயங்கா மௌனத்தின் சக்தியை வெளிப்படுத்தினார். தினமணியில் ஒரு வெற்று தலையங்கத்தை வெளியிட்டு அவசரகால நிலையை எதிர்த்தார். அதனால்தான் அவர் சிறந்தவர்.

கவிதை, கதை, கட்டுரைகள் மற்றும் விமர்சனங்கள் மூலமாக சமூகம் மற்றும் நாகரிக மதிப்புகளின் வெளிப்பாடுதான் இலக்கியம். கலாசாரத்தைப் பாதுகாக்கிறது. இந்தியாவின் கலாசாரம் உலகத்திலேயே மதிப்புமிக்கது. வேதங்கள், உபநிடதங்கள் முதல் தற்போதைய நவீன இலக்கியங்கள் வரை நமது எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. நம்முடைய கலாசாரம் நம்முடைய டிஎன்ஏவில் இருக்கிறது.

பொருளாதாரரீதியாக, சமூக ரீதியாக இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதனால் பத்திரிகைகள் வினியோகம் குறைந்திருக்கிறது. இளைஞர்களிடையே பத்திரிகைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு இல்லை. நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், பொருளாதார ரீதியான முன்னேற்றம் குறித்து பத்திரிகைகளில் 2 பக்கங்களாவது எழுத வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் குறித்து எழுதுங்கள். அந்த காலத்தில் தினமணியில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் படிப்போம். படைப்பாற்றலைத் தாண்டி சமூகம் சார்ந்த நெறிமுறைகளுடன் பத்திரிகைகள் இருக்க வேண்டும்.

கருத்துகளின் சுதந்திர வெளிப்பாடு, ஜனநாயத்தின் தூண். கருத்து சுதந்திரம் இல்லையென்றால் ஜனநாயகம் இல்லை" என்று பேசினார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவா் மனோஜ் குமாா் சொந்தாலியா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், குழுமத்தின் தலைமைச் செயல் நிர்வாகி லட்சுமி மேனன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சந்த்வானா பட்டாச்சார்ய, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

Summary

C.P. Radhakrishnan speech in ramnath goenka sahitya samman awards function

C.P. Radhakrishnan speech in ramnath goenka sahitya samman awards function
ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள்! குடியரசுத் துணைத் தலைவர் வழங்கினார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com