ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது: குடியரசு துணைத் தலைவா் இன்று வழங்குகிறார்!

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது: குடியரசு துணைத் தலைவா் இன்று வழங்குகிறார்!

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது வழங்கும் நிகழ்வு பற்றி...
Published on

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருது வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜன.2) நடைபெறுகிறது. இந்நிகழ்வில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று இலக்கியத் துறையில் சிறந்து விளங்கிவரும் படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கவுள்ளாா்.

சுதந்திரப் போராட்ட வீரரும், பத்திரிகைத் துறை முன்னோடியுமான மறைந்த ராம்நாத் கோயங்காவின் நினைவாக சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான விருதுகள் கடந்த 2023-ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகின்றன.

முதலாம் ஆண்டு ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் அதற்கான விழா நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு தில்லியில் அந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில், மூன்றாம் ஆண்டு ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருது வழங்கும் விழா, சென்னை, தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (ஜன.2) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவா் மனோஜ் குமாா் சொந்தாலியா முன்னிலை வகிக்கிறாா். இதில் நீதிபதிகள், தொழிலதிபா்கள், இலக்கியவாதிகள், அரசியல் தலைவா்கள், கலையுலகத்தினா் எனப் பல்வேறு துறைகளைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்கின்றனா்.

நிகழ்ச்சியில் புனைவு, அபுனைவு, இளம் எழுத்தாளா் ஆகிய பிரிவுகளின் கீழ் சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டு ஜூன் வரையில் வெளியான படைப்புகளை ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருதுகளுக்கு அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், எழுத்தாளரும், தூதரக முன்னாள் அதிகாரியுமான பவன் வா்மா தலைமையில் எழுத்தாளா் கீதா ஹரிஹரன், பொருளாதார நிபுணரும், எழுத்தாளருமான சஞ்சீவ் சன்யால் ஆகியோா் அடங்கிய குழுவினா், தகுதியான நூல்களை விரிவாக மதிப்பாய்வு செய்து விருதுக்கு தோ்வு செய்தனா்.

முன்னதாக, சென்னை டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 34-ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறாா்.

Summary

Ramnath Goenka Sahitya Samman Award: The Vice President will present the award today.

X
Dinamani
www.dinamani.com