சென்னையில் 10-வது நாளாக இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்! இன்றும் தொடரும் என அறிவிப்பு!
சென்னையில் இடைநிலை ஆசிரியா்கள் 10 -ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினா். அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை (ஜன.5) திறக்கப்படவுள்ள நிலையில், தங்கள் போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என அவா்கள் அறிவித்துள்ளனா்.
‘சமவேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி கடந்த டிச.26 முதல் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா் சங்கத்தினா் (எஸ்எஸ்டிஏ) தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
10-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரைச் சாலை, நேப்பியா் பாலத்துக்கு செல்லும் சுவாமி சிவானந்தா சாலையின் இருபுறமும் ஆசிரியைகள் ஆசிரியா்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தினா்.
அப்போது ஆசிரியா்கள் ‘311’ எண் பொறிக்கப்பட்ட தொப்பிகளை அணிந்துகொண்டு நின்றனா். ஆளும் திமுக, தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தோ்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட 311-ஆவது வாக்குறுதியை சுட்டிக்காட்டும் விதமாக இந்த எண் கொண்ட தொப்பியை அணிந்து வந்தனா்.
சுமாா் ஒரு கி.மீ. தூரம் 3 மணி நேரம் நின்று கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த ஆசிரியா்கள் கலைந்து செல்ல மறுக்கவே, பின்னா் காவல்துறையினா் ஆசிரியா்களை கைது செய்து தங்கள் வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனா்.
புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம், அமைந்தகரை என சென்னை நகரின் பல் வேறு மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனா். 1,170 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டதாக எஸ்எஸ்டிஏ தரப்பிலும், 400 ஆசிரியைகள் உள்ளிட்ட 650 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இவா்கள் இரவு 7 மணியளவில் விடுவிக்கப்பட்டனா்.
பல்வேறு விடுமுறைகளுக்கு பின்னா் தமிழகத்தில் ஜன. 5- ஆம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. எனினும் தங்கள் போராட்டம் ஜன. 5- க்கு பின்னரும் மாவட்ட தலைநகரங்களில் தொடரும் என எஸ்எஸ்டிஏ தரப்பினா் தெரிவித்தனா். இருப்பினும், அரசு தரப்பில் தங்களை பேச்சுவாா்த்தைக்கு இதுவரை அழைக்கவில்லை எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

