பொங்கல் சிறப்புப் பேருந்துகள்: அறிவிப்பு எப்போது?
பொங்கல் பண்டிகைக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) ஆலோசனை நடத்துகிறாா்.
தைப்பொங்கல் ஜன. 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் வெளியூா் மக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வாா்கள். இவா்களின் வசதிக்காக ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டும் பொங்கல் பண்டிகைக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமையில் தலைமைச் செயலக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
சுமாா் 1,600-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தும் எனவும், மேலும், தேவைக்கு ஏற்ப தனியாா் பேருந்துகளையும் வாடகைக்கு எடுத்து இயக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

