மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

உலகம் உங்கள் கையில் திட்டத்தை தொடக்கிவைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியவை குறித்து...
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்படம் - டிஐபிஆர்
Updated on
2 min read

மனித குலத்துக்கு காலம் தந்துள்ள இரண்டாவது நெருப்புதான் செய்யறிவு (ஏஐ) என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அறிவியல் மேம்பாடுகளுக்கு ஏற்ப மாணவர்களும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தொழில்நுட்பம் கற்பதை ஆப்ஷனாக எடுத்துக்கொள்ளக் கூடாது, கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் உலகம் உங்கள் கையில் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 5) தொடக்கி வைத்தார்.

மாணவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின்
மாணவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின்படம் - டிஐபிஆர்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

விளையாட்டுத் துறையைச் சேர்ந்த செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்டோருடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, மணிகண்டன் ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது:

''உலகமே உங்கள் கைகளில் என்பது வெறும் தலைப்பு கிடையாது. அதுதான் உண்மை. திராவிட இயக்கம் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்கமாக உள்ளது.

மாணவர்களை வளர்த்தெடுத்தால்தான் மாநிலம் வளரும், நாடு வளரும். மாணவர்களை வளர்க்கவே நான் முதல்வன் திட்டம், லேப்டாப் வழங்கும் திட்டம் போன்றவற்றை செயல்படுத்துகிறோம்.

அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை அடுத்த தலைமுறைக்கு உடனடியாகக் கொடுக்க வேண்டும்.

25 ஆண்டுகளுக்கு முன்பே இனி கணினி காலம் என்பதை உணர்ந்து ஐடி தொழில்நுட்ப பூங்காவுக்கு வித்திட்டவர் கருணாநிதி. தமிழகத்துக்கான தொழில்நுட்ப கொள்கையை வகுத்தார்.

செய்யறிவு தொழில்நுட்பத்துடன் மடிக்கணினி கொடுக்கிறோம். உலகத்தோடு போட்டி போடுங்கள். அந்தப் போட்டியில் களமிறங்குவதற்கான கருவியை உங்கள் கைகளில் கொடுத்துள்ளோம்.

தொழில்நுட்பம் கற்பது ஆப்ஷன் கிடையாது. உங்கள் துறைகளில் நீங்கள் நிலைத்திருக்க அவசியம் அது தேவைப்படுகிறது. டிகிரி படிப்பத்தோடு நாள்தோறும் அறிவியலில் நடக்கும் மேம்பாடுகளுக்கு ஏற்ப நீங்களும் மேம்பாடு அடைய வேண்டும்.

மனிதர்களுக்கு மாற்றாக ஏஐ இருக்காது. மனிதர்களின் வேலைகளை எளிமையாக்குவதற்காகவே ஏஐ உள்ளது. மனித குலத்திற்காக காலம் தந்துள்ள இரண்டாவது நெருப்புதான் ஏஐ.

திறனும் பகுத்தறிவும் அறிவியல் பார்வையும் இணைந்து செயல்பட்டாலே புதுப்புது கண்டுபிடிப்புகள் உருவாகும். மாணவர்கள் வசதிக்காக பெர்பிளக்ஸிட்டி என்ற செய்யறிவு மென்பொருள் மடிக்கணினியுடன் 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

உலகம் உங்கள் கைகளில் உள்ளது. வெற்றி பெற்று வாருங்கள். தமிழ்நாடு உங்களை நம்பியே உள்ளது. தமிழ்நாடு வெல்லட்டும்'' என முதல்வர் பேசினார்.

மு.க. ஸ்டாலின்
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டத்தைத் தொடக்கிவைத்தார் முதல்வர்
Summary

AI is the second fire that time has given to humanity: M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com