பழைய சோறு சாப்பிட்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

பழைய சோறு, அதன் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்துக்கான கருத்தரங்கத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியது...
பழைய சோறு (கோப்புப்படம்)
பழைய சோறு (கோப்புப்படம்)
Updated on
3 min read

பழைய சோறு சாப்பிட்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜன. 5) சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் “பழைய சோறு குறித்த அறிவியல் கருத்தரங்கம்“ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:

கடந்த 5 ஆண்டுகளாக மரு.ஜெஷ்வந்தின் தீவிர முயற்சியின் காரணமாக பழைய சோறு பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட காரணமாக உலகிற்கு பல்வேறு தகவல்கள் இந்த கருத்தரங்கத்தின் வாயிலாக எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது.

பழைய சோறு என்பது நமது முன்னோர்களின் காலத்திலிருந்தே தொண்டு தொட்டு வருகின்ற ஒரு உணவாகும். சமைத்த உணவு நொதிக்கப்பட்டு இருந்த உணவுதான் பழைய சோறு.

இந்தியாவில் இரவு ஊற வைத்த உணவு காலையில் உட்கொள்வது தான் பழைய சோறு. இந்த சோறு மூலம் பல்வேறு சத்துக்கள் நமது உடலில் செல்கின்றது. பழைய சோறு மூலம் நல்ல பாக்டிரியாக்கள் மற்றும் நுண்சத்துக்கள் இருப்பதை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியின் ஆராய்ச்சி மையத்தில் கண்டு பிடிக்கப்பட்டு தற்போது வெளிப்படுத்தி வருகிறார்கள் குறிப்பாக நார்ச்சத்துக்கள் 631% அதிகமாகவும், எதிர்ப்பு மாவு சத்து 270% அதிகமாகவும், புரதச்சத்து 24% அதிகமாகவும் நுண் சத்துக்களான இரும்புச்சத்து, துத்தநாகம், செலினியம், வைட்டமின் - பி சத்துக்கள் இருக்கிறது. மேலும், இரும்பு சத்துக்களை 12 மடங்கு அதிகமாக உடலில் எடுத்துக் கொள்ள செய்கிறது. பழைய சோற்றில் இருக்கும் நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்கள் குடலில் சேர்ந்து 2,000 மேற்பட்ட உயிர் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்கிறது.

பழைய சோறு தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

புற்றுநோய் வராமல் தடுப்பது, நீரிழிவு நோய் வரமால் தடுப்பது, குடலின் நல்ல ஆரோக்கியம் மற்றும் உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மற்றும் கருவுற்றவர்கள் எடுத்துக்கொள்வதால் குழந்தை நன்றாக வளர்கிறது. குறை பிரசவம் வெகுவாக குறைகிறது, கர்ப்பகால நீரிழிவு நோய் வருவது குறைகிறது, கர்ப்பகால அதிக உயர் இரத்த அழுத்த நோய் வராமல் பாதுகாக்கிறது. இருதய நோயிலிருந்து காப்பாற்றுகிறது, ரத்த கொழுப்பு அளவுகளை குறைக்கிறது. கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் ஆபத்தான அமிலங்களை கல்லீரலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. அதிக வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு குடலில் ஒரு அரணாக இருந்து நுண்சத்துக்கள் மற்றும் நீர் சத்துக்கள் வெளியேறாமல் பாதுகாக்கிறது.

பழைய சோறு சாப்பிடுவதால் சரியாக கூடிய பல்வேறு நோய்கள்

பல்வேறு வகையான வயிற்றுப்போக்கு நோய்கள், கிருமித்தொற்றால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மலச்சிக்கல், எரிச்சல் கொண்ட நோய்க்குறி, வயிறு வீக்கம் மற்றும் வாயு பிடிப்பு போன்ற நோய்களிலிருந்து குணமாவதற்கு உதவுகிறது. இப்படியாக உடல் நலத்திற்கு பாதுகாப்பான மிகச் சிறந்த உணவாக பழைய சோறு இருக்கிறது. இதன் முக்கியத்துவம் கருதி ரூ.2.44 கோடி செலவில் 11.03.2022 அன்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் “வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறை” தொடங்கப்பட்டு பழைய சோறு குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பழைய சோறு சிகிச்சை மூலம் இரைப்பை சிகிச்சை மேற்கொண்டவர்களிடமும் உரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.44 கோடி செலவில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம் “வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறை உருவாக்கப்பட்டது.

மேலும் பழைய சோறு குறித்து நான் உங்களுக்கு எடுத்துரைக்க தகுதி படைத்தவராக இருப்பதை நான் அறிகிறேன். நான் சிறுவயதில் இருந்தே வாரத்திற்கு 2 முறை பழைய சோறு சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றி வருகிறேன். இப்போது இந்த கருத்தரங்கத்தின் மூலம் பழைய சோறு மூலம் கிடைக்கும் நன்மைகளை நான் அறிந்தபிறகு வாரத்தின் 7 நாட்களும் பழைய சோறு சாப்பிடுவது என்பது நான் முடிவு செய்திருக்கிறேன். ஏதாவது ஒரு உணவு இரவு 11 மணிக்கு காரமாக சாப்பிட்டு காலை 4 மணிக்கு எழுந்தவுடன் உடற்பயிற்சி செல்லும்போது குடல் எரிச்சல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதுவே பழைய சோறு சாப்பிட்ட அன்று காலையில் இந்த குடல் எரிச்சல் என்பது இல்லை. எனவே இது அறிவியல் பூர்வமாகவே இது ஒரு நல்ல பலனை தருகிறது என உணர்ந்தவன் நான். குடலில் ஏற்படுகிற புண் நீண்ட நாள்களுக்கு பிறகு புற்று நோய் என்ற புது வடிவத்தோடு ஒரு பெரிய அளவிலான பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

எனவே அந்த புண்னை சரி செய்வதற்கு பழைய சோறு காரணமாக இருப்பாதால் எல்லோருமே இதனை உட்கொள்வது நல்லது. இதனால் பல நன்மைகள் உள்ளது. நோய் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். அதையும் தாண்டி காலையில் இதனை எடுத்துக்கொள்ளும்போது தாய்மார்களுக்கு சமைக்கிற பணி என்பது 100 சதவீதம் குறைகிறது. இதனால் சமைக்கும் நேரமும் மிச்சப்படுகிறது, மேலும் பொருளாதாரமும் மிச்சப்படுகிறது. பழைய சோறு என்றால் ஏழையின் அடையாளம் என்கிற வகையில் ஒரு கேள்வியும் எழக்கூடும். ஆனால் நிச்சயம் ஒரு மருத்துவர் 5 ஆண்டு காலம் உழைத்து பல்வேறு வகையில் இந்த பழைய சோற்றினை சாப்பிட்டவர்களுடன் உரையாடி, அவர்கள் பெற்ற பலனை எல்லாம் அனுபவ ரீதியிலாகவே உணர்ந்த காரணத்தினால் தான் இதை செய்து காட்டியுள்ளார்கள்.

எனவே, இந்த ஆராய்ச்சி பெரிய அளவில் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது நம்முடைய ஒவ்வொருவருடைய கடமை. இதனால் யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் எந்த பாதிப்பும், எதிர்வினையும் ஏற்பட்டுவிடாது. எனவே நாம் ஒவ்வொருவரும் பெரிய அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த துறையின் சார்பில் நம்முடைய மரு.ஜெஸ்வந்துக்கு இக்கல்லூரியின் முதல்வர் தொடர்ச்சியாக உறுதுணையாக இருந்துக் கொண்டு வருகிறார். இந்த துறையின் சார்பில் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இந்த செய்தியை பொது மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கும் இது சம்பந்தமான குறிப்புகளையும், கோப்புகளையும், இத்துறையின் ஆராய்ச்சிகளையும் ஆவணங்களையும் வைத்து முதல்வர் மற்றும் நமது துறையின் அலுவலர்கள் அனைவருடனும் பழைய சோறு தினம் குறித்து கலந்து பேசி துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Summary

Tamil Nadu Health Minister Ma. Subramanian has stated that consuming leftover rice can help prevent diabetes.

பழைய சோறு (கோப்புப்படம்)
தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,280 உயர்வு! வெள்ளி விலை ரூ. 9000 அதிகரிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com