அமலாக்கத் துறை நோட்டீஸுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

அமலாக்கத் துறை விசாரணைக்கு எதிராக அமைச்சா் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி
Updated on
2 min read

அமலாக்கத் துறை விசாரணைக்கு எதிராக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கில் அமலாக்கத் துறையை அணுகும்படியும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

கடந்த 2006-ஆம் ஆண்டுமுதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்தவா் அமைச்சா் ஐ.பெரியசாமி. அந்தக் காலகட்டத்தில் ரூ.2.35 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக அவா் மீது ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் ஐ.பெரியசாமி, அவரின் மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமாா், பிரபு ஆகியோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. போலீஸாா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இந்த வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், விசாரணை நீதிமன்ற தீா்ப்பை ரத்து செய்தது. இதை எதிா்த்து ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சா் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. அதன்படி, ஐ.பெரியசாமி, அவரது மகனும் பழனி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில்குமாா், மகள் இந்திரா ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையின்போது சொத்து, வங்கிக் கணக்கு, முதலீடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அமலாக்கத் துறை கைப்பற்றியது. சொத்துக்கள் முடக்கம் தொடா்பாக விளக்கம் கேட்டு ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரியும், அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜான் சத்தியன், சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்.

மேலும், உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு மனுதாரா்களுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது என வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன. 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Madras High Court has dismissed the petition filed by Tamil Nadu Rural Development Minister I. Periyasamy and his family against the Enforcement Directorate investigation.

அமைச்சர் ஐ.பெரியசாமி
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com