

புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
திலாசுப்பேட்டையில் நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி பொங்கல் தொகுப்புகளைப் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் திருமுருகன், லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அரசு சாா்பில் வழங்கப்படும் இந்தப் பொங்கல் தொகுப்பை சனிக்கிழமை மாலை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைப்பாா் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவரது இல்லத்துக்கு அருகில் உள்ள திலாசுபேட்டை ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்புக்கான சில பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்தக் கடையில் பொருள்கள் வாங்கும் சிலரும் அங்கு அழைத்து வரப்பட்டிருந்தனா். பின்னர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகக் கூறி அங்கிருந்த எல்லா பொருள்களையும் ரேஷன் கடையில் வைத்துப் பூட்டிச் சென்றனா் அதிகாரிகள். இந்தப் பொங்கல் தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டு சா்க்கரை, 1 கிலோ பாசி பருப்பு, 300 கிராம் நெய், 1 கிலோ சூரியகாந்தி எண்ணெய், 1 பை என 6 பொருள்கள் இடம் பெறுகின்றன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் உள்ள 3.48 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு இந்தத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில் அரசு ஊழியா்கள், கௌரவ ரேஷன் அட்டை வைத்திருப்பவா்கள் தனி. அவா்கள் இதில் இடம் பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.