திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசே காரணம்; தீபம் ஏற்றலாம்! நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருப்பது பற்றி...
திருப்பரங்குன்றம் உச்சி பிள்ளையார் கோயில் அருகேவுள்ள தீபத் தூண்
திருப்பரங்குன்றம் உச்சி பிள்ளையார் கோயில் அருகேவுள்ள தீபத் தூண்
Updated on
1 min read

திருப்பரங்குன்றம் விவகாரம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மேலும், தீபம் இருக்கும் இடம் கோயில் நிர்வாகத்துக்கே சொந்தமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை திருநாளன்று தீபம் ஏற்ற உத்தரவிட்ட நிலையில், கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றவில்லை.

இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து உத்தரவிட்ட நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றாமல், இரு நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவு செல்லும் என்றும், மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் கோயில் நிர்வாகம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் உத்தரவில் முக்கியமானவை:

  • திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்றால் அதற்கு தமிழக அரசே காரணம்.

  • கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவது பொது அமைதியை சீர்குலைக்கும் என்பது அபத்தமானது.

  • அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டுள்ளது.

  • அரசியலுக்காக எந்த மாநிலமும் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செயல்படக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்.

  • சட்டம் - ஒழுங்கு பிரச்னை என்பது அதிகாரிகள் தங்களின் வசதிக்காக உருவாக்கிய கற்பனை காரணம்.

  • திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத் தூண் தர்காவுக்கு சொந்தமானது என்ற வாதம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

  • தீபத் தூண் கோயில் நிர்வாகத்துக்கே சொந்தமானது.

  • கார்த்திகை தீபமானது மலை உச்சியில் இருக்கும் தீபத் தூணில் கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும்.

  • தீபம் ஏற்றும் நிகழ்வின்போது கோயில் நிர்வாகத்துடன் செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை.

  • நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஹிந்து மற்றும் முஸ்லிம் பண்டிகைகளின்போது இரு தரப்பினரும் ஒருவரைக்கொருவர் தொந்தரவு செய்யாமல் அவரவர் பண்டிகையை கொண்டாடிக் கொள்ளலாம்.

  • தனி நீதிபதி சுவாமிநாதனின் அனைத்து உத்தரவுகளும் செல்லும்.

இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் முடித்துவைத்தது.

Summary

Thiruparankundram issue: The Tamil Nadu government is responsible; the lamp can be lit! Court order.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com