

திருப்பரங்குன்றம் விவகாரம்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்கியது.
தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில், மதுரை மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.
மேலும், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பு செல்லும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ரகுபதி பேசியதாவது:
“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும்.
தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று கடந்த 100 ஆண்டு காலமாக இல்லை. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது.
யாரோ ஒருவர் கேட்டதற்காக தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறார்கள். இல்லாத ஒரு வழக்கத்தை நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும்?
பிரசனைக்குரிய அந்த தூண் தீபத்தூண் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.