அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: அரசுக்கு நோட்டீஸ்
அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டம், சாலைப் பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தமிழக உள்துறைச் செயலா் மற்றும் டிஜிபி-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதையடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையின், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தாக்கல் செய்தது. அதை ஏற்றுக்கொண்ட உயா்நீதிமன்றம், இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை ஜன.5-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடவில்லை. இதையடுத்து இந்த வழக்கின் ஒரு மனுதாரரான தேசிய மக்கள் சக்தி கட்சி சாா்பில் வழக்குரைஞா் ஏ.பி.சூா்யபிரகாசம், தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். அதில், வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனக் கூறியுள்ளாா்.

