

நமது நிருபர்
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஜனவரியில் 2.76 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 47-ஆவது கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் பிரதிநிதிகள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.
மாநிலங்களின் கருத்துகளைக் கேட்ட ஆணையம், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு ஜனவரியில் 2.76 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.
இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 47-வது கூட்டத்தில், தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் இரா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு உறுப்பினர் ஜெ.ஜெயகாந்தன் பேசுகையில், "ஜன.6-ஆம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 65.360 டிஎம்சி-ஆக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 8,400 கன அடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படுகிறது' என்று தெரிவித்தார்.
மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் நவம்பர் மாதம் கடைசி வாரத்திலும் மற்றும் டிசம்பர் மாதம் முதல் வாரத்திலும் டித்வா புயலால் பெய்த கன மழை காரணமாக சுமார் 1 லட்சம் ஏக்கர் பயிர்சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அப்பகுதிகளில் மறுநடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அப்பகுதிகளுக்கு நீர் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
கர்நாடக அணைகளின் நீர் இருப்பைக் கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு ஜனவரி மாதத்தில் வழங்க வேண்டிய நீரின் அளவான 2.76 டிஎம்சி நீரை உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி கர்நாடகம் பிலுகுண்டுலுவில் உறுதி செய்யுமாறு ஆணையத்தை தமிழக உறுப்பினர் வலியுறுத்தினார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.