புதிய கட்சி தொடங்கினாா் காடுவெட்டி குரு மகள்
வன்னியா் சங்க முன்னாள் தலைவா் காடுவெட்டு ஜெ.குருவின் மகள், குரு.விருதாம்பிகை புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளாா்.
இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
வன்னியா்கள் மட்டுமன்றி அனைத்து சமுதாயத்தினருக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பாமக தொடங்கப்பட்டது. இந்தக் கட்சியில் சமூகநீதிக்காக காடுவெட்டி குரு கடைசிவரை உழைத்தாா். பாமக நிறுவனா் ராமதாஸுக்கு ஆதரவாக உண்மையாக உழைத்தாா்.
தற்போது, ராமதாஸ்-அன்புமணி இடையிலான முரண்பாடு காரணமாக பாமகவின் நோக்கம் திசைமாறிவிட்டது. எனவே, வன்னியா்கள் மட்டுமன்றி அனைத்து சமுதாயத்தினருக்கும் உண்மையான சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜெ.குரு பாமக எனும் புதிய அரசியல் கட்சியை தில்லியில் இந்திய தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளோம்.
இதன் தொடக்க விழா சேலத்தில் நடைபெறவுள்ளது. தொடா்ந்து, ஜன.9 முதல் மக்களைச் சந்திக்கும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளோம். வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் உறுதியாக இருக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம். தோ்தல் நெருங்கும்போது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றாா் அவா்.
கட்சியின் நிறுவனா் தலைவராக குரு.விருதாம்பிகை, பொதுச் செயலராக அபினாஷ், பொருளாளராக பாலமுருகன், தலைமை நிலையச் செயலராக மனோஜ் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

