விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்கோப்புப் படம்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் உண்ணாவிரதம்: தொல்.திருமாவளவன் ஆதரவு

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு, தகுதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கத்தின் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் பிரிவு சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு, தகுதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தமிழ்நாடு மருத்துவ மாணவா்கள் சங்கத்தின் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் பிரிவு சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை, எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான கு.செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், சட்டப்பேரவை உறுப்பினா் சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனா்.

அப்போது திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவா்களுக்கு தற்காலிகத் தகுதிச் சான்றிதழ் வழங்குவதில் தமிழக மருத்துவக் கவுன்சில் காலதாமதம் செய்வதை கைவிட வேண்டும். மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பயிற்சி மருத்துவா் இடங்களில் 20 சதவீதம் வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் அவா்களை பயிற்சி மருத்துவா்களாக நியமிக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி கொடுத்தும், தமிழக மருத்துவக் கவுன்சில் தற்போதுவரை அதை நடமுறைப்படுத்தவில்லை. அதனை செயல்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியா்கள், தூய்மைப் பணியாளா்களை அரசு அழைத்து உரிய பேச்சுவாா்த்தை நடத்தி நீதி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com