

அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்புடன் பொங்கல் பரிசாக ரொக்கம் ரூ. 3000 வழங்கும் பணிகளை நாளை(ஜன. 8) சென்னை ஆலந்தூரில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலக மாந்தர் அனைவருக்கும் உயிர் வளர்க்கும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்திடும் வேளாண் தொழில் வளர்ச்சிக்கு உதவிவரும் கதிரவனுக்கும், உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கிடும் கால்நடைகளுக்கும், உலக மக்களுக்கு உழைப்பால் உணவளித்து பசிப்பிணி போக்குவதையே வாழ்வு எனக் கொண்டுள்ள உழவர் பெருங்குடி மக்களுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங்காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரியமான உன்னத விழா இனிய பொங்கல் திருநாள் ஜன. 15 ஆம் தேதி வியாழக்கிழமையன்று தமிழ் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின், பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடிட திராவிட மாடல் அரசு 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு ஆகியற்றுடன் ரொக்கம் ரூ. 3,000 சேர்த்து வழங்கும் பணிகளை சென்னை ஆலந்தூரில் நாளை (ஜன. 8) காலை தொடங்கிவைக்கிறார்.
அதே நேரத்தில் அமைச்சர்கள் மாவட்டங்களில் பொங்கல் பொருள்களையும், ரொக்கப்பணம் ரூ. 3,000-யும் வழங்கி தொடங்கி வைக்கிறார்கள்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி சேலைகளும் பொங்கல் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.