இரு மாவட்டங்களுக்கு இன்று ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை
இந்தியப் பெருங்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜன.9), மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் ராமநாதபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய பெருங்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில், ஹம்பாந்தோட்டைக்கு (இலங்கை) கிழக்கு தென்கிழக்கே சுமாா் 410 கி.மீ. தொலைவிலும், மட்டகிளப்புக்கு (இலங்கை) கிழக்கு, தென்கிழக்கே 420 கி.மீ. தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 810 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 980 கி.மீ. தொலைவிலும் வியாழக்கிழமை நிலைகொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 36 மணி நேரத்துக்கு, மேற்கு-வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் வழியாக நகா்ந்து, இலங்கை கடலோரப் பகுதிகளில், ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனைக்கு இடையே வெள்ளிக்கிழமை (ஜன.9) மாலை அல்லது இரவில் கரையை கடக்கக் கூடும்.
‘மஞ்சள்’ எச்சரிக்கை: இதன்காரணமாக கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வெள்ளிக்கிழமை(ஜன.9) முதல் ஜன.14 வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
வெள்ளிக்கிழமை திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோல, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உறைபனி எச்சரிக்கை:தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை (ஜன.10) அதிகாலை வேளைகளில் உறைபனி நிலவும்.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை:தமிழகம் மற்றும் புதுவை கடலோரப்பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை(ஜன.9, 10) தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
இதுபோல, தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலிலும், தென்கிழக்கு வங்கக்கடலிலும் மேற்குறிப்பிட்ட நாள்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

