

சென்னை புத்தகக் காட்சி: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் 49வது சென்னை புத்தகக் காட்சி இன்று(ஜன.8) தொடங்கி ஜன. 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக சென்னை நந்தனம் திடலில் மிகப் பெரிய அளவில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டித் துவங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழாண்டு புத்தகக் காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது. முதல்முறையாக அனைவருக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில் தமிழ் மொழிக்காக 428 அரங்குகளும், ஆங்கில மொழிக்காக 256 அரங்குகளும், பொது அரங்குகள் 24 உள்பட 1,000 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. ஜப்பான் மொழி நூல்களுக்கு ஓர் அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.