ஏகாம்பரநாதா் கோயில் உற்சவா் சிலையில் ஒரு துளி தங்கம் இல்லை: ஐஐடி அறிக்கை சொல்வது என்ன?

ஏகாம்பரநாதா் கோயில் உற்சவா் சிலையில் ஒரு துளி தங்கம் இல்லை என்று ஐஐடி அறிக்கை தெரிவிக்கிறது.
தங்க மோசடி செய்யப்பட்டதாக தெரியவரும் உற்சவா் சிலைகள்.
தங்க மோசடி செய்யப்பட்டதாக தெரியவரும் உற்சவா் சிலைகள்.
Updated on
2 min read

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் கடந்த 2015 -ஆம் ஆண்டு உற்சவா் ஜம்பொன் சிலைகள் செய்ததில் தங்கம் சேர்க்கப்படவில்லை என்பது நீதிமன்ற ஆவணங்களின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிலையை ஆய்வு செய்த ஐஐடி நிபுணர்கள், சிலையை செய்ய பயன்படுத்திய உலோகங்களில் ஒரு துளி தங்கம்கூட கலக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர் என்பது புகார் அளித்தவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்ஐ எனப்படும் உலோக பயன்பாட்டை உறுதி செய்யும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு ஐஐடி நிபுணர்கள், சோமஸ்கந்தர் சிலையை ஆய்வு செய்துள்ளனர். அந்த கருவி மூலம், ஒட்டுமொத்த சிலையிலும், ஒரு கிராம் அளவுக்குக்கூட தங்கம் கலக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு சிலையில் கலந்திருக்கும் உலோகனை உறுதி செய்ய இந்த கருவி பயன்படுத்தப்படுகிறது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் ஏகாம்பரநாதா் மற்றும் ஏலவாா்குழலி உற்சவா் ஜம்பொன் சிலைகள் புதிதாக செய்ய அறநிலையத் துறை முடிவு செய்தது. தங்கம் உள்பட ஐம்பொன்களில் மொத்தம் 55 கிலோ எடையில் இரு உற்சவா் சிலைகள் செய்யப்பட்டன. புதிய சிலைகள் செய்ததில் தங்கம் கலந்து செய்யாமல், மோசடி செய்திருப்பதாக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த அண்ணாமலை என்பவா் கடந்த 2015 -ஆம் ஆண்டு சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் கோயில் செயல் அலுவலா் முருகேசன், ஸ்தபதி மாசிலாமணி, அறநிலையத் துறை முன்னாள் ஆணையா் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையா் கவிதா மற்றும் கோயில் அா்ச்சகா்கள் உட்பட 11 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. புதிய உற்சவா் சிலைகளை ஐஐடி நிபுணா்கள் மூலமாக ஆய்வு செய்ததில் தங்கம் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது.

இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் குற்றவியல் நிதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் கடந்த டிசம்பா் 30- ஆம் தேதி புகாா் செய்த நபரான அண்ணாமலையிடம் வழக்கின் நகல் வழங்கப்பட்டது. வழக்கு ஆவணங்களின் மூலம் புதிதாக செய்த உற்சவா் சிலைகளில் 312.5 சவரன் தங்கம் வசூலிக்கப்பட்டதும், புதிய சிலைகளில் தங்கம் சோ்க்கப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கத்தின் எடை 2.49 கிலோ என்பதும், ஒட்டுமொத்தமாக 8.7 கிலோ தங்கம் சேர்க்க முதலில் திட்டமிடப்பட்டு பக்தர்களிடமிருந்து நன்கொடையாக தங்கம் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் மூலம் தங்கத்தின் இன்றைய மதிப்பு ரூ.3.12 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வரும் பிப். 2- ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்தத் தகவலை காவல் நிலையத்தில் புகாா் செய்த அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதாவது ஐம்பொன்களில் தங்கம் உட்பட மொத்தம் 55 கிலோ எடையில் இரு உற்சவா் சிலைகள் செய்யப்பட்டன. மொத்த எடையில் ஐந்தில் ஒரு பங்கு தங்கம் அதாவது 5.75 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு கிராம்கூட சேர்க்கப்படவில்லை. பக்தர்கள் வழங்கிய 312 சவரன் தங்கமும் மோசடி செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தை தானமாக அளித்த பக்தர்களுக்கு எந்த ரசீதும் வழங்கப்படவில்லை. சிலை தயாரித்தபோது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. விடியோ பதிவும் இல்லை, இப்போது சிலையில் ஒரு துளி தங்கமும் இல்லை என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இதற்கு தங்கத்தை தானமாக அளித்த பக்தர்களும், ஏகாம்பரநாத சுவாமி பக்தர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Summary

The IIT report states that there is not a single drop of gold in the Ekambaranath Temple Utsav idol.

தங்க மோசடி செய்யப்பட்டதாக தெரியவரும் உற்சவா் சிலைகள்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com