தொழில்நுட்பம் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு மட்டுமான கருவி இல்லை என முதல்வர் பேச்சு.

முதல்வர் ஸ்டாலின், சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில் நுட்பவியல் மற்று டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற Umagine TN-2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடக்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டார்.
முதல்வர் ஸ்டாலின், சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில் நுட்பவியல் மற்று டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற Umagine TN-2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடக்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டார்.
Updated on
3 min read

தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு மட்டுமான கருவி இல்லை; எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன. 8) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற UmagineTN-2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து, உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைத்து வரக்கூடிய Umagine-இன் நான்காவது மாநாட்டை தொடங்கி வைப்பதில் நான் பெருமை அடைகிறேன். சொல்லும்போதே தெரியும்! நாம் ஆட்சிக்கு வந்த பிறகு தான், இந்த மாநாட்டை நடத்தத் தொடங்கினோம். அது இன்றைக்கு மிகப் பிரமாண்டமாக நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிப் பயணத்தில், ஒரு முக்கியமான தருணமாக இந்த இரண்டு நாள் மாநாடு அமையும் என்று நான் நம்புகிறேன். இன்றும், நாளையும் நடைபெற இருக்கின்ற மாநாடு.

எந்தெந்த தலைப்பில் ‘செஷன்’ ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று பார்த்தேன். கடைக்கோடி பகுதியையும், டிஜிட்டல் ஹெல்த்-கேர் மூலமாக சென்றடைவது - கேமிங் துறையில் தமிழ்நாட்டை முக்கிய மையமாக முன்னேற்றுவது - வாட்சாப் கவர்னென்ஸ் தொடக்கம் - அறம், பரிவு மற்றும் ஏ.ஐ. - தொழில்நுட்பப் புரட்சியை பெண்கள் வழிநடத்துவது - இப்படி பல தலைப்புகள்! அனைத்தும் தற்காலத்திற்கு தேவையானதாக, மிகவும் ரெலவன்டாக இருக்கிறது!

தொழில்நுட்ப வளர்ச்சியில், தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு படி முன்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்! அதை நிறைவேற்றுவது போல, இந்த மாநாடு அமைந்திருக்கிறது!

நவீனத்தை நோக்கிய பாய்ச்சல் - சமூக சமநிலை - அனைவருக்குமான வளர்ச்சி என்று திராவிட மாடல் அரசின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் வகையில் “UMAGINE TN 2026” மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கும் நம்முடைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துகொண்டு செல்ல வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வரக்கூடியவர். இந்த மாநாடு தொடர்பாகவும், விடியோக்களை வெளியிட்டு இதன் நோக்கம் எல்லோருக்கும் சென்று சேரும்படி முயற்சிகள் எடுத்தார். அரசியலையும் கடந்து நம்முடைய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறார்.

இப்போதுகூட “உலகம் உங்கள் கையில்” நிகழ்ச்சியில், மாணவர்களின் சந்தேகங்களுக்கு எல்லாம் தெளிவான விளக்கங்களை வழங்கினார். எந்த சிக்கலான விஷயமாக இருந்தாலும், விவாதமாக இருந்தாலும் மிகவும் எளிமையாக, லாஜிக்கலாக நம்முடைய தரப்பை விளக்கி, எதிர்த்தரப்பை திக்குமுக்காட வைத்துவிடுவார். அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி. அவருக்கும், அவருக்கு துணையாக இருந்து இந்த மாநாட்டிற்காக உழைத்தவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!

தொழில்நுட்பத் துறையில், இன்றைக்கு நாம் இந்த அளவிற்கு எல்லோருக்கும் அட்வான்சாக இருக்கிறோம் என்றால், அதற்கான அடித்தளத்தை அமைத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர்! ”தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு மட்டுமான கருவி இல்லை; அது சாமானியர்களை Empower செய்யும் கருவி” என்ற பார்வையுடன் தமிழ்நாட்டின் I.T. பாலிசியை கலைஞர் வார்த்தெடுத்தார்.

பள்ளிகளிலேயே கணினிக் கல்வி - டைடல் பூங்கா என்று அவர் கொடுத்த ஓப்பனிங்-இல்தான் நாம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்! தொழில்நுட்பம் ஒரு துணைச் செயல்பாடாக இல்லாமல், பொருளாதார சக்கரத்தின் மைய அச்சாக இன்றைய நிலையில் மாறியிருக்கிறது. நாம் பாரம்பரியமாக வலுவாக இருக்கும் சர்வீஸ் செக்டாரிலிருந்து, உயர்நுட்பம், புத்தாக்கம் மற்றும் புதுமை மையமான பொருளாதாரத்திற்கு தமிழ்நாடு நகர்ந்து வருகிறது!

நெக்ஸ்ட் ஜென் G.C.C.-க்களின் மையமாக சென்னை நகரம் உருவெடுத்து வருகிறது! அட்வான்ஸ்டு R&D, A.I, ஃபின்-டெக், வாகன மென்பொருள், பொறியியல் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு மையங்கள் இங்கு உருவாகி வருகிறது. எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், ஸ்பேஸ், டெக்ஸ்டைல், புதுப்பிக்கத்தக்க எனர்ஜி போன்ற துறைகளில் வலுவான அடித்தளத்தின் A.I, ஆட்டோமேஷன், டேட்டா பேஸ் மற்றும் டிஜிட்டல் வடிவமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்திருக்கும் மாநிலங்கள் உலகளவிலேயே மிகவும் குறைவு.

இப்படி, உற்பத்தித் திறனையும், டிஜிட்டல் புதுமையையும் ஒருங்கிணைக்கும் தொழிற்சூழல் இயல்பாகவே அமைந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தனிச்சிறப்பாக அமைந்திருக்கிறது! ஆனால், இது தானாகவே நிகழ்ந்துவிடவில்லை! திராவிட மாடல் ஆட்சியின் வழிநடத்திய காரணத்தினால் தான் இது உருவாகியிருக்கிறது.

டெக்னாலஜியை வெறும் பொருளாதார வளர்ச்சிக் கருவியாக பார்க்காமல், சமூக முன்னேற்றத்திற்கான சாதனமாக பார்ப்பதுதான் திராவிட மாடல்! பாலிசி லெவலில் தொடங்கி, கல்வி நிறுவனச் செயல்பாடுகள், நான் முதல்வன் போன்ற திறன் மேம்பாட்டு முயற்சிகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், உலகளாவிய தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு முகமைகள் வரை எல்லாம் ஒரே பாதையில், ஒரே இலக்குடன் சேர்ந்து செயல்படும் தமிழ்நாட்டின் நிர்வாக கட்டமைப்பும், தொழில்நுட்பக் கண்ணோட்டமும்தான் நம்முடைய வளர்ச்சிக்கான காரணம்.

Deep tech திறன் மேம்பாட்டு திட்டங்கள், டேட்டா செண்டர் பாலிசி, ஆராய்ச்சிக் கட்டமைப்பில் தொடர்ச்சியான முதலீடுகள் இவை எல்லாம் சேர்ந்து I.T. சேவை மையம்’ என்ற அடையாளத்தில் இருந்து, முழுமையான தொழில்நுட்ப மற்றும் புதுமை சக்தியாக தமிழ்நாட்டை மாற்றும் தெளிவான பாதையை வெளிப்படுத்துகிறது. இந்த மாற்றம் ஒரு நகரத்தில் மட்டுமே சுருங்கிவிடாமல், மாநிலம் முழுவதும் சமமாக பரவுவதையும் உறுதி செய்திருக்கிறோம்.

ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு மற்றும் நியோ டைடல் பார்க் போன்ற முயற்சிகள் மூலம், புதுயுக பொருளாதார வளர்ச்சி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி போன்ற நகரங்களும், தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்குதாரர்களாக உயர்ந்திருக்கிறது.

நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுவது போன்று ஒரு டேட்டாவை சொல்கிறேன்! தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில், 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடைபெறுகிறது என்று மத்திய அரசின் STPI வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. திராவிட மாடல் என்றால் என்ன? என்று கேட்பவர்களுக்கு மத்திய அரசு சொல்லும் இந்த தரவுதான் என்னுடைய பதில்!

தமிழ்நாட்டின் புத்தாக்க சூழலும், இந்தியாவிலேயே சிறந்த ஒன்றாக இருக்கிறது. பெரும் I.T. மற்றும் பொறியியல் மனிதவளம், உலகத் தர கல்வி நிறுவனங்கள், பல சிறப்பு மையங்கள், இந்தியாவின் முதலாவது டீப் டெக் இன்குபேட்டர் - எல்லாம் இணைந்து, ஆராய்ச்சியில் இருந்து அறிவுசார் சொத்துகள் உருவாக்கம், உலகச் சந்தை அடைவு வரை முழுமையான பயணத்தை சாத்தியமாக்கி இருக்கிறது. இதன் ரிசல்ட் தான், இந்தியாவில் பதிவாகும் நான்கில் ஒரு காப்புரிமை அதாவது ‘பேட்டண்ட்’ விண்ணப்பம் தமிழ்நாட்டில் இருந்து பதிவாகும் வகையில் நாம் முன்னணியில் இருக்கிறோம்!

நிதி, நில நிர்வாகம், காவல், மருத்துவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகளை கையாளும் மாநில அளவிலான டிஜிட்டல் தளங்கள் ஆகியவை மக்கள் அளவிலான டிஜிட்டல் நிர்வாகம் நடைமுறையில் சாத்தியமானது என்று நிரூபிக்கிறது. இது எல்லாவற்றிற்கும் எது மையக் காரணம் என்றால், நம்முடைய ஆற்றல்மிக்க மனிதவளம்தான்!

இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தான், A.I. சந்தாவுடன் கல்லூரி மாணவர்களுக்கு லேட்டஸ்ட் மாடல் லேப்டாப்களை ‘உலகம் உங்கள் கையில்’ என்று அந்தத் திட்டத்தின் மூலமாக வழங்கியிருக்கிறோம்! இதை செலவு என்றோ, இலவசம் என்றோ நாங்கள் கருதவில்லை! தொழில்நுட்பம் எல்லோருக்கும் சமமாக கிடைப்பதற்கு எதிர்காலத்தை நோக்கிய முதலீடாகதான் இதை பார்க்கிறோம். அந்த வகையில் நம்முடைய கனவுகளுக்கு சிறகுகளை வழங்குவது போல, தொழில்நுட்பம், தரவுப் பொருளாதாரம், டிஜிட்டல் நிர்வாகம், புத்தொழில் நிறுவனங்கள், உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய அனைத்தையும் ஒரே மேடையில் இந்த UMAGINE TN மாநாடு ஒருங்கிணைத்திருக்கிறது.

தமிழ்நாட்டின் இலக்குகள் தெளிவானது. புது யுகத்தின் டெக்னாலஜியில் தமிழ்நாடுதான் டாப்-இல் இருக்க வேண்டும்! ஆனால், அந்த வளர்ச்சியில் யாரும் விட்டுப்போக கூடாது; அறிவானாலும், தொழில்நுட்பமானாலும் எல்லோருக்குமானதாக அது இருக்க வேண்டும்! அப்படி ஒரு வருங்காலத்தைதான் நம்முடைய இளைய தலைமுறைக்காக திராவிட மாடல் அரசு கட்டி எழுப்பி வருகிறது!

இன்றைய UMAGINE வருங்காலத்தை நோக்கிய நம் பயணத்திற்கான பிரகடனம்! நம் நாளைய வெற்றிக்கான தொடக்கம்! வெல்வோம் ஒன்றாக” என்றார்.

Summary

Chief Minister Stalin has stated that technology is not a tool meant only for a specific class; it should be equally accessible to everyone.


முதல்வர் ஸ்டாலின், சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில் நுட்பவியல் மற்று டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற Umagine TN-2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடக்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டார்.
மண்ணும் மனிதர்களும்... அல்ஜீரியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com