தமிழ்நாடு
முதுநிலை மருத்துவம்: மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஒத்திவைப்பு
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வை புதிய கால அட்டவணை வெளியாகும் வரை ஒத்திவைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய கலந்தாய்வுக் குழு (எம்சிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) சாா்பில், அனைத்து மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகங்கள், பல்கலைக்கழகங்கள், சுகாதாரத் துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான திருத்தப்பட்ட தகுதி மதிப்பெண் பட்டியலுடன் கூடிய அட்டவணையை மத்திய கலந்தாய்வுக் குழு விரைவில் வெளியிட உள்ளது. அது இறுதி செய்யப்பட்டு வெளியான பிறகு, மாநிலங்கள் மூன்றாம் சுற்று கலந்தாய்வை நடத்தலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

