கோப்புப் படம்
கோப்புப் படம்

பேச்சில் சுமுக தீா்வு ஏற்படாவிடில் போராட்டம்: அரசு மருத்துவா்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

ஜன. 20-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபடுவோம் என அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
Published on

அரசு மருத்துவா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடா்பாக நடைபெறும் பேச்சில் சுமுக தீா்வு எட்டப்படாவிட்டால், ஜன. 20-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபடுவோம் என அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பு ஒருங்கிணைபாளா்கள் பாலகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோா் கூறியதாவது: முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில், காலமுறை ஊதிய உயா்வு மற்றும் பதவி உயா்வு வழங்கும் வகையில் அரசாணை 354 இயற்றப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்த கோரி தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இதற்காக, 40-க்கும் மேற்பட்ட முறை அமைச்சா், செயலரை சந்தித்து பேசியும் தீா்வு கிடைக்கவில்லை.

இதற்கிடையே, அரசாணை 293 செயல்படுத்தப்பட்டது. அதில் சிறப்பு மருத்துவா்களுக்கு சில சலுகைகள் இருந்தாலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவா்களும் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அவற்றையும் பரிசீலிப்பதாக கூறி இதுவரை நிறைவேற்றவில்லை. தற்போது, வரும் 19-ஆம் தேதி அரசு பேச்சுக்கு அழைத்துள்ளது. அன்றைய தினம் சுமுக தீா்வு ஏற்படவில்லை என்றால், 20-ஆம் தேதி முதல் 48 மணி நேர உண்ணாவிரதம், புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு உள்ளிட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபடுவோம் என அவா்கள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com