விபத்தில் பலியான கல்லூரி மாணவர்கள்.
விபத்தில் பலியான கல்லூரி மாணவர்கள்.

மேட்டூர்: மினி வேன் - மோட்டார் சைக்கிள் மோதல்! கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி ஆட்டோ மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட மூன்று பேர் பலியாகினர்.
Published on

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி ஆட்டோ மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட மூன்று பேர் பலியாகினர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி கிராமம் இராமகவுண்டனூரை சேர்ந்தவர் சஞ்சய் பாரதி (20) கல்லூரி 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் மோகன் (20) பிகாம் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு இருவரும் புதிய மோட்டார் சைக்கிளில் நங்கவள்ளியிலிருந்து எடப்பாடி நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தனர்.

பாப்பாத்தி காடு அருகே சென்ற போது ஜலகண்டபுரத்தில் இருந்து நங்கவள்ளி நோக்கி வந்த பால் வண்டி (டாடா ஏசி) மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த சஞ்சய்பாரதி, மோகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பால் வண்டியில் வந்த மேச்சேரி செட்டிகாரச்சியூரை சேர்ந்த ராஜா மகன் விமல்ராஜ் (20) என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பால் வண்டியில் வந்த மேச்சேரி செட்டி காரச்சியூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (21) பலத்த காயங்களுடன் சேலம் தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பால்வண்டி ஓட்டுநர் விஜயராகவனுக்கு (18) லேசான காயம் ஏற்பட்டது.

இவர் நங்கவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திருப்பினார். இறந்தவர்களின் 3 சடலங்களும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக நங்கவள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dinamani
www.dinamani.com