

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன், சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தத் திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் முடிவின் மூலமாக, விரிவான, நம்பகமான தரவுகளைப் பெற்று, சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்திடவும், நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்திடவும் இயலும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், இது தமிழ்நாடு அரசின் நீண்டகால கோரிக்கையுடன் ஒத்துப்போவதால், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன், சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்திட வேண்டுமென்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானங்களை ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி, இந்தக் கோரிக்கையில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒன்றிய அரசின் இந்த முடிவானது, ஆதாரங்களின் அடிப்படையிலான சமூகநீதிக்கான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதி செய்வதாகவும் உள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது ஆழமாக வேரூன்றிய சமூக இயக்கவியல், பல்வேறு மாநிலங்களில் சாதிய கட்டமைப்புகளிலுள்ள வேறுபாடுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடன் கையாளப்படாவிட்டால், எதிர்பாராத சமூகப் பதட்டங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தக்கூடிய உணர்வுபூர்வமான விஷயமாக உள்ளதால், இக்கணக்கெடுப்பினை மேற்கொள்வதற்கான கேள்விகள், பிரிவுகள், துணைப்பிரிவுகள் மற்றும் தரவு சேகரிப்பு வழிமுறைகள் துல்லியமாகவும், தெளிவானதாகவும் இருக்கும்பட்சத்தில் மட்டுமே, பொது நம்பிக்கையை உறுதி செய்திட முடியுமென்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இல்லாவிடில், இந்த அம்சங்களில் ஏதேனும் குறைபாடுகள், சர்ச்சைகள், துல்லியமின்மை அல்லது பிளவுபட்ட கருத்துக்களை அதிகரிக்கக்கூடும் எனவும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் இருந்தாலும், அதன் முடிவுகள் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் குறித்த மாநில அளவிலான கொள்கைகளை ஆழமாகப் பாதிக்கும் என்பதால் இப்பணி தொடர்பான வினாப் படிவங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை முடிவு செய்வதற்கு முன்பாக ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசிப்பது அவசியமானதாகும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகைய ஆலோசனை, இந்த முக்கியமான செயல்பாட்டில், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களின் பல்வேறு கண்ணோட்டங்களை இணைக்கவும், குறிப்பிட்ட நுணுக்கங்களைக் கணக்கிடவும், கூட்டாட்சியை வளர்க்கவும் உகந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, 1. சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்து மேம்படுத்திட மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்கவும்;
2. இப்பணி தொடர்பான செயல்முறையின் உணர்திறனைப் பாதுகாக்கவும், சமூக நீதியை மேம்படுத்துவதற்கான தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், தேவைப்படும் இடங்களில் முன்னோடி சோதனை ( pilot study) உட்பட, கட்டமைப்பை வடிவமைப்பதில் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியப் பிரதமரின் தலைமையின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும், கூட்டாட்சிக் கொள்கைகளை நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்படும் என்று தான் நம்புவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.