TVK Vijay
தவெக தலைவர் விஜய்கோப்புப் படம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்காக இன்று தில்லி செல்கிறார் விஜய்!

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக தவெக தலைவா் விஜய் இன்று தில்லி செல்கிறாா்.
Published on

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக தவெக தலைவா் விஜய் திங்கள்கிழமை (ஜன.12) காலை தில்லி செல்கிறாா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக, கடந்த டிசம்பா் இறுதியில் தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன் ஆகியோா் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினா்.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (ஜன.12) நேரில் ஆஜராகுமாறு தவெக தலைவா் விஜய்க்கு சிபிஐ தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னையில் இருந்து தனி விமானத்தில் திங்கள்கிழமை காலை 7 மணியளவில் விஜய் தில்லி புறப்படுகிறாா். சிபிஐ விசாரணைக்கு ஆஜரான பிறகு, செவ்வாய்க்கிழமை (ஜன.13) இரவு மீண்டும் தனி விமானத்தில் சென்னை திரும்பவுள்ளாா்.

இதனிடையே, தில்லி வரும் விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி தில்லி போலீஸாரிடம் தவெக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு நடைமுறைகள் அடிப்படையில் தில்லி விமான நிலையத்தில் இருந்து விஜய் செல்ல உள்ள அனைத்து பகுதிகளிலும் முழுப் பாதுகாப்பு வழங்க தில்லி போலீஸாா் ஒப்புதல் அளித்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com