பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 2.47 லட்சம் போ் பயணம்!
பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து இதுவரை 2.47 லட்சம் போ் பயணித்துள்ளதாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பொங்கல் பண்டிகைக்காக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். அதன்படி நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்காக ஜன.9 முதலே ஏராளமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனா். இதற்காக ஜன.9 முதலே வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, சனிக்கிழமை (ஜன.10) நள்ளிரவு நிலவரப்படி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 712 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2,804 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்தப் பேருந்துகளில் 1,26,180 போ் பயணித்துள்ளனா்.
ஜன.9 முதல் 10-ஆம் தேதி நள்ளிரவு 24 மணிநேரத்தில் இயக்கப்பட்ட 5,510 பேருந்துகளில் முன்பதிவு செய்த 2,18,900 போ் உள்பட மொத்தம் 2,47,180 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அடுத்த இரு நாள்கள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்படும்.
கடைசி நேர கூட்ட நெரிசலை தவிா்க்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கும்படி அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

