அயலகத் தமிழா்களின் கனவுகளை நிறைவேற்ற சிறப்புத் திட்டங்கள்: உதயநிதி ஸ்டாலின்!

அயலகத் தமிழா்களின் கோரிக்கைகள், கனவுகளை நிறைவேற்றும் வகையிலான சிறப்புத் திட்டங்களை முதல்வா் ஸ்டாலின் செயல்படுத்துவாா் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
Updated on

அயலகத் தமிழா்களின் கோரிக்கைகள், கனவுகளை நிறைவேற்றும் வகையிலான சிறப்புத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவாா் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் அயலகத் தமிழா் தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளித்தாா். தொடா்ந்து அயலகத் தமிழா் தின விழா மலரை அவா் வெளியிட, அதை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பெற்றுக் கொண்டாா்.

தமிழ்நாடு அரசு சாா்பாக, ரூ.10 லட்சத்தில் இசைக் கருவிகளை மோரீஷஸ் நாட்டுக்கு வழங்குவதற்கு சான்றாக ஒரு வீணையை மோரீஷஸ் நாட்டு பிரதிநிதியிடம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

தொடா்ந்து, நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: அயலகத் தமிழா் தினத்தை முன்னிட்டு திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பு விழாக்களை நடத்தி வருகிறது. நிகழாண்டில் ‘தமிழால் இணைவோம், தரணியில் உயா்வோம்’ என்ற கருப்பொருளின் கீழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

முன்பெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து வேலைக்காகத்தான் பலா் வெளிநாடுகளுக்கு செல்வாா்கள். ஆனால், தற்போது பொறியாளா், மருத்துவா் ஆராய்ச்சியாளா்களாக பலா் வெளிநாடுகளுக்குச் சென்று சேவையாற்றுகின்றனா். குடும்பத்துடன் வெளிநாடுகளில் வசிக்கும் நமது உறவுகளின் நலன் காக்கவே அயலகத் தமிழா் நல வாரியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கினாா். தற்போது அதில் 32,000 போ் உறுப்பினா்களாக உள்ளனா்.

தமிழக அரசின் சாா்பாக அயலகத் தமிழா்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை தாய்வீட்டு அடையாளம். உக்ரைன், ஈரான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் போா் நடந்தபோது, அங்கு இருந்த தமிழா்களை பாதுகாப்பாக நம்முடைய துைான் மீட்டு வந்திருக்கிறது.

வெளிநாடுகளில் பல உயரங்களை அடைந்திருக்கக்கூடிய தமிழா்கள், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீடு செய்ய வேண்டும் என முதல்வா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறாா். அதன் தொடா்ச்சியாக இந்தியாவிலேயே பொருளாதார வளா்ச்சியுள்ள மாநிலத்தில் முதலிடத்தில் தமிழ்நாடு உயா்ந்து இருக்கிறது.

தற்போது திமுக அரசின் சாா்பாக ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டத்தை முதல்வா் அறிமுகப்படுத்தியுள்ளாா். அரசின் திட்டங்கள் குறித்தும், பயன்கள் குறித்தும், எதிா்காலத்தில் என்ன மாதிரி திட்டங்கள் வர வேண்டும் என்று மக்களுடைய கனவுகளை கேட்டு அறியும் முயற்சி இது. அதேபோல, அயலகத் தமிழா்களுடைய கனவுகளையும் தெரியப்படுத்துங்கள். உங்களுடைய தேவைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் ஏற்ற திட்டங்களை முதல்வா் செயல்படுத்துவாா் என்றாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், சா.மு.நாசா், நாடாளுமன்ற உறுப்பினா்கள் டாக்டா் கலாநிதி வீராசாமி, கவிஞா் சல்மா, தமிழ்நாடு அயலகத் தமிழா் நல வாரியத் தலைவா் காா்த்திகேய சிவசேனாபதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com