

நமது நிருபர்
மகர சங்கராந்தி, பொங்கல், லோஹ்ரி மற்றும் இதர அறுவடைத் திருவிழாக்களையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: நமது தேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களிலும் பழக்கவழக்கங்களிலும் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாக்கள், பருவகால மாற்றத்தையும், சூரியனின் வடதிசைப் பயணத்தையும், பல மாத அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட பயிர்களின் அறுவடையையும் எடுத்துரைக்கின்றன.
இவை அனைத்தும் விவசாயம் மற்றும் இயற்கையுடனான இந்தியாவின் நீடித்த நாகரிகப் பிணைப்பை வெளிப்படுத்துவதுடன், நமது செழுமையான பன்முகத்தன்மைக்கு அடிப்படையாக உள்ள ஒற்றுமையையும் எடுத்துக்காட்டுகின்றன.
இந்தக் காலமானது, விவசாயத்தின் முதன்மைப் பங்கையும், விவசாயியின் கண்ணியத்தையும் போற்றிய திருவள்ளுவரின் "சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால், உழந்தும் உழவே தலை' எனும் குறளை எனக்கு நினைவூட்டுகிறது.
இத்தகைய காலத்தால் அழியாத வார்த்தைகள், அனைத்து முன்னேற்றங்களுக்கும் மத்தியிலும் உலகம் இறுதியில் ஏரையே சார்ந்துள்ளது என்பதையும், அதனால் விவசாயமே அனைத்துத் தொழில்களிலும் முதன்மையானது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
இந்த மங்களகரமான தருணங்களில், நமது விவசாய சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும், நமது கலாசார மரபுகளைப் பாதுகாக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய, மீள்திறன் கொண்ட மற்றும் வளமான இந்தியாவுக்காக ஒன்றிணைந்து செயல்படவும் நமது உறுதியை மீண்டும் புதுப்பித்துக் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.