

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையொட்டி, ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். பாலமேட்டில் மஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இந்த நிலையில் இன்று (ஜன.17) உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாய் துவங்கியது. இந்தப் போட்டியை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க 1,100-க்கும் மேற்பட்ட காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த போட்டியில் அதிக காளைகளைப் பிடித்து வெற்றி பெறும் சிறந்த வீரருக்கு ஹூண்டாய் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியுடன் துவங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் உள்ள முக்கிய கோவில்களில் காளைகள் வாடிவாசலில் முதலில் அவிழ்த்துவிடப்பட்டன.
ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு வருகை தருவதால், தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் வருகையை ஒட்டி அலங்காநல்லூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காலை 9.45 மணியளவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வரும் முதல்வர், களத்தில் விளையாடும் மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசளிப்பார்.
108 ஆம்புலன்ஸ்கள் 12, பைக் ஆம்புலன்ஸ்கள் 2, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.