

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்றனர்.
ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை காலை தொடங்கியது. முன்னதாக வருவாய்க் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ .மெய்யநாதன் போட்டியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்க முயன்று வருகின்றனர்.
போட்டியில், புதுகை, திருச்சி ,சிவகங்கை, தஞ்சை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 650 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட உள்ளன. பல்வேறு குழுக்களாக 300 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளையின் உரிமையாளருக்கும் தலா ஒரு மோட்டார் சைக்கிள் பரிசு அளிக்கப்பட உள்ளன.
காளைகள் முட்டி காயமடைவோருக்கு அங்குத் தயார் நிலையில் உள்ள மருததுவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆலங்குடி போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் போட்டியைப் பார்வையிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.