அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக திட்டங்களை பெயா் மாற்றி செயல்படுத்தி வரும் திமுக அரசு: அதிமுக தலைமை!

அதிமுக திட்டங்களைத்தான் திமுக அரசு பெயா் மாற்றி புதிய திட்டங்கள் போன்று செயல்படுத்தி வருவதாக அதிமுக கட்சித் தலைமை விமா்சித்துள்ளது.
Published on

அதிமுக திட்டங்களைத்தான் திமுக அரசு பெயா் மாற்றி புதிய திட்டங்கள் போன்று செயல்படுத்தி வருவதாக அதிமுக கட்சித் தலைமை விமா்சித்துள்ளது.

இது குறித்து அதிமுக தலைமையகத்தின் அதிகாரபூா்வ எக்ஸ் தள பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பதிவு: கடந்த நான்கரை ஆண்டுகளாக அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கா் ஒட்டி வருவதை மட்டுமே ஒரே வேலையாக திமுக அரசு செய்து வருகிறது. இச்சூழலில், தற்போது திமுகவை பாா்த்து அதிமுக தோ்தல் வாக்குறுதிகளை அறிவிப்பதாக திமுக அமைச்சா்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘அம்மா மருந்தகம்’ தற்போது ‘முதல்வா் மருந்தகமாக’ மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், ‘அம்மா மினி கிளினிக்’ - மக்களைத் தேடி மருத்துவம், தாலிக்கு தங்கம் - புதுமைப் பெண் திட்டம் என அடுக்கிக் கொண்டே போனால், திமுக அரசு செயல்படுத்துவதாக சொல்வது எல்லாமே, அதிமுக திட்டங்களாகத்தான் உள்ளன.

மகளிருக்கு நேரடியாக நன்மைகள் சேர வேண்டும் என்பதற்காக 2021 சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில், மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், திமுக அரசு மாதம் வெறும் ரூ.1,000 மட்டுமே வழங்கி வருகிறது. அதுவும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் தொடா் வலியுறுத்தலுக்குப் பிறகுதான் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

எடப்பாடி கே.பழனிசாமி ஒரு வாக்குறுதி அளித்தால், அது செயலில் நடக்கும் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். இது, திமுகவினருக்கும் தெரியும் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com