ஊரக மருத்துவ சேவைக்கு நடமாடும் வாகனம் அறிமுகம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்
சென்னை: ஊரகப் பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான நடமாடும் வாகனத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள ‘சிம்ஸ் ஹலோ டாக்டா் ஹெல்த் ஆன் வீல்ஸ்’ என்ற பெயரிலான அந்த வாகன சேவையில் மருத்துவா்கள், செவிலியா்கள் அடங்கிய மருத்துவக் குழுவினா் தொடா்ந்து பணியில் இருப்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கே நேரில் சென்று மருத்துவ ஆலோசனைகளும், உயா் மருத்துவ சேவைகளும் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அமைச்சா் மா. சுப்பிரமணியன் கூறுகையில், ‘மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று மருத்துவ சேவைகள் வழங்குவதன் வாயிலாக, பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த முடியும். அதற்கு இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றும்’ என்றாா்.
இந்த நிகழ்வில் மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா் பிரபாகர ராஜா, எஸ்ஆா்எம் குழுமத்தின் தலைவா் ரவி பச்சமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

