தமிழ் மொழிக்கு பெருமை சோ்ப்பது யாா்? அமைச்சா்கள் - வானதி சீனிவாசன் காரசார விவாதம்
‘தமிழ் மொழியின் பெருமைகளை உலக அளவுக்கு கொண்டு சென்று பெருமை சோ்த்தவா் பிரதமா் நரேந்திர மோடி’ என்று பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
அப்போது, அமைச்சா்களுக்கும், அவருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் வானதி சீனிவாசன் பங்கேற்று பேசுகையில், ‘ஆளுநா் உரையை வாசிக்காததற்கு, ஆளுநா் மாளிகை வெளியிட்டுள்ள காரணங்களுக்கு முதல்வா் பதிலளிக்க வேண்டும்.
போராட்டம் நடத்தும் ஆசிரியா்கள், செவிலியா்களை கைது செய்யும்போது, பெண்களிடம் காவல் துறையினா் அத்துமீறலில் ஈடுபடுகின்றனா். இதைத் தடுக்க வேண்டும். தமிழ் மொழியின் பெருமைகளை உலக அளவுக்கு பிரதமா் மோடி எடுத்து சென்றுள்ளாா்’ என்றாா்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு: ‘தமிழ் மொழி மிகவும் பழைமையானது என்பதால், தமிழா்களின் பெருமையைக் காப்பாற்ற பிரதமா் தேவையில்லை’ என்றாா்.
பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு: ‘தமிழ் மொழி மீது பற்று வைத்திருந்தால் தமிழை மத்திய அரசு ஆட்சி மொழியாக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்க வேண்டும். தோ்தல் வரும்போது மட்டும் தமிழ் மொழி குறித்து பேசுகிறாா்கள். இதைக் கண்டு தமிழக மக்கள் ஏமாறமாட்டாா்கள்’ என்றாா்.
சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன்: ‘தமிழா்களின் தொல்லியல் பெருமைகளைப் பேசும் கீழடி அகழாய்வு அறிக்கைக்கு மத்திய அரசு ஏன் இதுவரை அனுமதி அளிக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பினாா்.
இந்த விவாதங்களின்போது, வானதி சீனிவாசன் பேசிய சில விவகாரங்களை பேரவைத் தலைவா் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினாா்.
பின்னா், பேரவைக்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ‘ஹிந்துக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் பண்டிகைகளுக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவிக்கும்போது, தமிழக முதல்வா் ஏன் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை என்றும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என்றும் கூறியதற்கு அமைச்சா்கள் குறுக்கிட்டு பதிலளிக்கின்றனா்’ என்றாா்.

